×
 

உதயநிதியை களத்தில் இறக்குங்க! மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்க! திமுகவில் திடீர் அதிகாரப்போர்!

'மூத்த நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்க வேண்டும்' என, தி.மு.க.,வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள், கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் தேவை என்ற கருத்து வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வுக்குழுவை அமைத்துள்ளார். இந்த குழு மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை வரும் 10-ஆம் தேதிக்குள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கோடை கால ஓய்வுக்காக கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதிக்கு ஸ்டாலின் குடும்பத்தினர் சென்றிருந்தபோது, கட்சியின் எதிர்காலம் மற்றும் அமைப்பு மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "கண்ணிய தென்றல்"... காயிதே மில்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்..!!

அந்த ஆலோசனையின்போது, கட்சியில் நீண்ட காலமாக பொறுப்பில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு வழங்கி, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இளைஞர்களை நியமிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு பதிலாக புதிய நபரை நியமிப்பது குறித்தும், செயல் தலைவர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி நிர்வாக அமைப்பிலும் மாற்றங்கள் தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைகள் குறித்து ஸ்டாலின் உடனடியாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், சென்னை திரும்பிய பிறகு அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கள ஆய்வுக்குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு, கட்சி அமைப்பில் மாற்றங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு திமுக வட்டாரங்களில் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: மருத்துவ இடங்கள் சர்ச்சை... உதயநிதிக்கு இது தெரியாதா..? அமைச்சர் அருண்ராஜ் கிடுக்கிப்பிடி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share