திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?... ஸ்டாலினையே ஸ்டன் ஆக்கிய உ.பி.க்கள்... வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்...!
சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து திமுக களஆய்வுக் குழு அறிக்கை: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து திமுக தலைமையால் அமைக்கப்பட்ட களஆய்வுக் குழுவின் அறிக்கை, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை நேரடியாக களத்தில் ஆய்வு செய்து, உண்மையான தகவல்களை தலைமையிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, மாவட்ட வாரியாகவும் சட்டமன்றத் தொகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு காரணங்களால் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பிரதிநிதித்துவ வாய்ப்புகள் வழங்கப்படாதது முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள், ஆவின் சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாததால், கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தி நிலவியதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "மீண்டும் ஓர் பிளவு"..! திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய CPI..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
மேலும், கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிர்வாகிகளுக்கு அரசு மற்றும் கட்சி ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கத் தவறியதாகவும், சில இடங்களில் அரசு மற்றும் கட்சி தனித்தனியாக செயல்பட்டதாகவும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டபோது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததாகவும், ஆனால் தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் உடனடியாக வழங்கப்படாததால் அதிருப்தி ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகே பலருக்கு அந்தத் தொகை கிடைத்ததாகவும், அதைப் பெற்றுத்தர திமுக நிர்வாகிகள் கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்களிடையே ஏற்பட்ட அதிருப்தி தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு ஆதரவு அதிகரித்து வருவதை கள மட்ட நிர்வாகிகள் மேலிடத்திற்கு எடுத்துரைக்க முயன்றபோதும், அதற்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற கருத்தும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இளைஞர்களை கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த தவறியதாகவும் சில நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக கோரிய திட்டங்களுக்கு அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்காததால், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதிலும் ஏற்கனவே இருந்த ஆதரவை தக்க வைத்துக்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் உள்ளிட்ட நியமனங்களில் நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்த திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் சில முக்கிய நபர்களின் பரிந்துரையின்பேரிலும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில முக்கிய கோவில்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமான புகார்களும் களஆய்வுக் குழுவிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் மீதான அதிருப்தி, கட்சி நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பு குறைபாடுகள், மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மேலிடத்திடம் கொண்டு செல்ல முடியாத சூழல் போன்ற பல்வேறு அம்சங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட வாரியாகவும், துறை வாரியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு திமுக தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுக தேர்தல் தோல்வி குறித்த கள ஆய்வு..!! மு.க.ஸ்டாலின் கைக்கு போன பரபரப்பு ரிப்போர்ட்..!!