சட்டப்பேரவையில் பெரிதாக வெடித்த விவாதம்... அனல் பறந்த ‘பவுடர் மேட்டர்’... திமுக எடுத்த திடீர் முடிவு...!
கோவை மற்றும் திருவற்றியூர் மாணவர்கள் கொலைச் சம்பவங்கள் குறித்த விவாதத்தில் அரசு தரப்பில் முறையான அல்லது உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறி, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதம் நடைபெற்றது. மாணவரின் மரணம் தொடர்பாக அரசு அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக் கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் கூடிய அவையை, காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜே.சி.பி. பிரபாகர் திருக்குறளை வாசித்து தொடங்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, முதலமைச்சர் மற்றும் அரசுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் உரையாற்றினார். இதையடுத்து, கர்நாடகாவில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: போதைப் பொருளால் தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்... அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு... பேரவையில் அமளி.. !!
ஆனால், கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாகவும், முதலில் அது தொடர்பாக விவாதித்த பின்னர் மற்ற விவகாரங்கள் குறித்து பேசலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், மாணவர் அமுதன் கொலை சம்பவத்தை கோஷ்டி மோதல் என அமைச்சர் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டார். மாணவர் போதைப்பொருள் குறித்து தகவல் தெரிவித்ததன் காரணமாகவே சக மாணவர்களால் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “இது கோஷ்டி பூசல் அல்ல; படுகொலை. போதைப்பொருள் தொடர்பாக கோவை போலீசார் அமுதனை அழைத்துச் சென்று தகவல்களைப் பெற்றுள்ளனர். அந்தத் தகவல்களை குற்றவாளிகளிடம் போலீசாரே தெரிவித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் அலட்சியமும், காவல்துறையின் பொறுப்பற்ற செயல்பாடுமே மாணவர் அமுதனின் மரணத்துக்குக் காரணம். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2020-ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை என்றும், தற்போது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
திமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்ததாகக் கூறிய அவர், காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்ததாக குற்றம்சாட்டினார். போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால்தான் திமுகவை மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், “மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா அல்லது உயிரிழந்த மாணவரின் தாயாரின் கருத்தா என்று கேட்டால், எங்கள் முதலமைச்சர் அந்தத் தாயின் பக்கம்தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் அரசு இடம் கொடுக்காது” எனத் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் இரண்டரை வயது குழந்தை திமுக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான புகைப்படத்தையும் அமைச்சர் அவையில் காண்பித்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தவெக அமைச்சரே போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியிருந்ததாகவும், அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அவை மரபுப்படி கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அரசு தரப்புதான் பதிலளிக்க வேண்டும் என்றும், ஆனால் இங்கு திமுக மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மாணவர் அமுதன் படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான கேள்விகளுக்கு அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக் கூறி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: மாணவர்கள் கொலை... தொடரும் கொடூரங்கள்..! பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கு..!!