சட்டப்பேரவை தேர்தலில் திமுக துடைத்தெறியப்படும்: முதல்வருக்கு அமித் ஷா பகிரங்க எச்சரிக்கை!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் வவ்-தாராட் மாவட்டத்தில் பனாஸ் பால் பண்ணையால் புதிதாக நிறுவப்பட்டுள்ள உயிரி-சிஎன்ஜி (Bio-CNG) மற்றும் உர ஆலையைத் தொடங்கி வைத்தார். மேலும், அவர் 150 டன் பால் பவுடர் ஆலைக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சிகளைத் துடைத்தெறியும் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.
2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை பா.ஜ.க. தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல் வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆனது, பல ஆண்டுகளுக்குப் பின்னர் படைக்கப்பட்ட சாதனையாகும். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், இந்திய தேசம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு, உலக அளவில் சிறந்த நாடாகத் திகழும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? - தேர்தல் ஆணையம் விளக்கம்!
எதிர்க்கட்சிகளுக்குத் தலைவர்களோ அல்லது கொள்கைகளோ இல்லை. தேசத்தின் எந்தப் பகுதியிலும் அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கொள்கை பலம் இல்லாததால், அவர்கள் மக்களைச் சந்திப்பதற்கான வலுவான அடித்தளம் இல்லை என்று வலியுறுத்தினார்.
"இந்த மேடையிலிருந்து மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பீகாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும். அதற்குத் தயாராக இருங்கள்," என்று அவர் நேரடியாக எச்சரித்தார்.
"எதிர்வரும் தேர்தல் முடிவுகள் வரட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் துடைத்தெறியப்படும்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது! திமுகவை வெளியேற்ற ஒரு மாதத்தில் வலுவான கூட்டணி உருவாகும் - வானதி சீனிவாசன் உறுதி