×
 
☰

திமுக தோல்விக்கு காரணமானவர்கள் மீது முதலில் நடவடிக்கை! ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம்; கட்சிக்குள் பரபரப்பு?

கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அந்தக் கடிதம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்குக் காரணமான கட்சி நிர்வாகிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன்பிறகே கட்சியைச் சீரமைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அந்தக் கடிதம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய அவர் அமைத்த குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நிர்வாகிகள் குறித்த விவரங்களும் அந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அவர்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

இதையும் படிங்க: 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

கட்சியைச் சீரமைப்பது அவசியம் என்றாலும், தேர்தல் தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதால் பயன் இருக்காது எனக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான காலத்தில் கட்சியின் வெற்றிக்கு நிர்வாகிகளின் நேரடித் தொடர்பும் களப்பணியும் முக்கியப் பங்கு வகித்ததாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது ஐபேக், பென் டீம் போன்ற தேர்தல் வியூக நிறுவனங்களை நம்புவதால், கட்சியின் செயல்பாடுகள் நிறுவனமயமாகிவிட்டதாகத் தொண்டர்கள் விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலர்கள், மாநில நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் கட்சியின் அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பதவிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் கடிதத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கட்சி அலுவலகமான அறிவாலயம் வசூல் மையமாகச் செயல்படுவதாகவும் சில நிர்வாகிகள் தலைமையிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் செல்லாமல் தடுப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பான மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூர்ச் செயலர்கள் மீதும், கட்சி மற்றும் ஆட்சியில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தேர்தல் வியூக நிறுவனங்களின் ஆய்வுகளை மட்டுமே நம்பாமல், கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் செயல்பாடுகளைக் கண்காணிக்க விசுவாசமான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக திமுக தலைமை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதில் வெளியாகியுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதையும் படிங்க: கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டையில் கல் எறிவது போல..! குடமுழுக்கு விவகாரம்..!! சேகர்பாபு விமர்சனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share