தி.மலையில் இளைஞரணி மண்டல மாநாடு! விஜயை வீழ்த்த உதயநிதி மாஸ்டர் ப்ளான்!! தவெகவுக்கு திமுக செக்!
முதல் மண்டல மாநாட்டை வரும் 15ல் திருவண்ணாமலையில் நடத்த, தி.மு.க., இளைஞரணி திட்டமிட்டுள்ளது.
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் குறைந்தது 200 இடங்களை வென்று புதிய வரலாறு படைக்கும் மாபெரும் இலக்குடன் திமுக இளைஞரணி போர்க்கால தயாரிப்பில் இறங்கியுள்ளது. “வெல்வோம் 200... படைப்போம் வரலாறு” என்ற புதிய போர்க்கொடியை உயர்த்தி, மாநிலத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து மாபெரும் தேர்தல் பிரசார மாநாடுகளை நடத்த திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
முதல் மாநாடு டிசம்பர் 15-ல் திருவண்ணாமலையில் நடக்கிறது! இன்று (டிசம்பர் 3) கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கூடும் திருவண்ணாமலையில், “தேர்தல் பிரசார தீபத்தை” திமுக இளைஞரணி ஏற்ற திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 15-ல் நடக்கும் முதல் மண்டல மாநாடு வட மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அதற்குப் பிறகு சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களிலும் தொடர்ச்சியாக இளைஞரணி மாநாடுகள் நடத்தப்படும். பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து மண்டல மாநாடுகளும் முடிந்த பிறகு, மார்ச் மாதத்தில் மாபெரும் மாநிலத் தேர்தல் மாநாடு நடத்தி, வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிக தொகுதி! அமைச்சரவையில் இடம்!! மீண்டும் அடம்பிடிக்கும் காங்., தீராத தலைவலியில் திமுக!
திமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: “தவெகவில் இளைஞர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால், நமது இளைஞரணியை முழு வீச்சில் களமிறக்க வேண்டும் என்று உதயநிதி விரும்புகிறார். அதனால்தான் ‘உடன்பிறப்பே வா’ நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். ஏற்கனவே 8 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு நடக்கிறது. இளைஞரணி மாநாடுகள் இதை மேலும் தீவிரப்படுத்தும்” என்று கூறின.
திமுகவின் இந்த மாபெரும் தேர்தல் தயாரிப்பு, 2026-ல் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து, புதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் தீவிரமாக நடக்கிறது. கார்த்திகை தீபத்தில் தொடங்கும் இந்தப் பிரசாரப் பயணம், தமிழக அரசியல் களத்தை முழுவதும் சூடேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.பி எனக்கே இந்த நிலைமையா? மக்கள் கதி! மிரட்டல் போன்கால்! அதிர்ச்சி அடைந்த சி.வி.சண்முகம்!