மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி.. உதயநிதி முன்னிலையில் உறுதி எடுத்த இளைஞரணி நிர்வாகிகள்.!
தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக இளைஞரணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திமுக இளைஞரணியின் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். யில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த அப்பாவி மக்களுக்கும், ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் மற்றும் அஞ்சலி. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
‘மக்கள் பிரதிநிதிகளால் நடத்தப்படும் சட்டப் பேரவையைவிட, ஆளுநர் என்பவர் மேலானவர் அல்ல’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலவரம்பை நிர்ணயம் செய்ததுடன், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய 10 மசோதாக்களுக்கும், ஒப்புதல் வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில், இந்திய நீதித்துறை வரலாற்றில், முன் உதாரணமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பெற்றுத்தந்த திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும்.
மாநில உரிமைகளுக்கான மைல்கல்லாக விளங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர், ஆகியோரைத் தவறாகப் பயன்படுத்தும் மத்திய அரசையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே கேள்விக்குறியாக்கும் விதமாக குறுக்கு வழியை நாடும், கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமான சக்திகளுக்கும் கண்டம்.
‘மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை வழங்குவோம்’ என்ற ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு.
இதையும் படிங்க: தீர்ப்பு சாதகம்னா குதூகலிப்பது.. எதிர்ன்னா வக்கிர புத்தியை காட்டுவது.. திமுகவை டேமேஜ் செய்த இந்து முன்னணி!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றதைப் போலவே, கல்வி நிதிக்கான சட்டப் போராட்டத்திலும், சிறுபான்மையினர் நலன் காக்க, ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற இளைஞர் அணி சார்பில் வாழ்த்து.
இந்திய ஒன்றியத்திலேயே ‘நம்பர்-1’ மாநிலமாக தமிழ்நாட்டைக் கட்டமைத்து வரும் திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.
இந்த ஆண்டு வெளியான குடிமைப் பணித் தேர்வு முடிவுகளில் ‘நான் முதல்வன்- போட்டித் தேர்வு’ பிரிவில் பயின்று தேர்வான 50 போட்டியாளர்களுக்கு வாழ்த்து.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி உட்பட 9 பாலியல் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதற்கு வரவேற்பு.
தமிழர்களின் நகர நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள், 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார். ஆனால், ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடாமல், தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது ‘விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறிவிட்டு, தற்போது அந்த அறிக்கையைத் திருப்பி அனுப்பி, திருத்தங்களைக் கோரியுள்ளது.
தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முதல் ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு நன்றி.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 2026-சட்டமன்றத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர செயலாளர் தலைமையிலான இளைஞர் அணி எல்லா வகையிலும் துணை நிற்கும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: உதயநிதிக்கு பயமே இல்லையா.? ரத்திஷும் ஆகாஷ் பாஸ்கரனும் எங்கே.? நயினார் ஆவேச பதிலடி!