திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள்!! மாநாட்டில் உடைத்து பேசிய மா.கம்யூ.!! கூட்டணி கட்சியே இப்படியா?
திமுக கடந்த சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில், நிறைவேற்றப்படாதவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் பட்டியலிடப்பட்டது.
தர்மபுரி: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதற்கான பொதுவான அறிவிப்புகளுடன், தர்மபுரி மாவட்டத்துக்கென தனியாக 44 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வெறும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக மொரப்பூருக்கு நான்கு வழிச்சாலை அமைப்பது போன்ற ஒருசில திட்டங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. மற்றபடி, மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் நிலையம் மற்றும் நவீன மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைப்பது, செனாக்கல் நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்துவது, ஒகேனக்கல் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு கொண்டு சென்று பாசன வசதி ஏற்படுத்துவது, செனாக்கல் தடுப்பணை கட்டுவது,
அரூரில் தொழிற்பேட்டை அமைப்பது, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத் தலமாக மாற்றுவது, பென்னாகரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவது, பாப்பாரப்பட்டி வேளாண் பயிற்சி பள்ளியை வேளாண் கல்லூரியாக தரம் உயர்த்துவது, தர்மபுரியில் மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது, அனைத்து மலைக்கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்துவது போன்ற முக்கிய வாக்குறுதிகள் இன்னும் காக்காவில் கிடக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலின், உதயநிதியை தோற்கடிக்க இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்! அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் யார்?
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரம் மற்றும் அரூர் பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்த மாநாடுகளில் திமுக அளித்த வாக்குறுதிகளில் இன்னும் நிறைவேற்றப்படாதவை பட்டியலிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் தொடர்ந்து குரல் கொடுப்பதே தங்களது கொள்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
மாநாட்டில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேசுகையில், “எங்கள் கட்சி எப்போதும் மக்கள் நலன் சார்ந்து செயல்படும். அரூர் பகுதியில் பல்வேறு திட்டங்கள் வருவதற்கு எங்கள் கட்சி நடத்திய போராட்டங்களே காரணம்” என்று கூறினார்.
மாவட்ட செயலர் சிசுபாலன் பேசுகையில், “கடந்த தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். கூட்டணியில் இருந்தாலும், அதிமுகவை விட எங்கள் கட்சிதான் மக்கள் பிரச்னைகளுக்காக அதிக போராட்டங்களை நடத்துகிறது” என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி இவ்வாறு வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து பகிரங்கமாக கேள்வி எழுப்பியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு திமுகவின் செயல்பாடுகள் கூட்டணிக் கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: விஜய், ஸ்டாலின் கனவு பலிக்காது? யாருக்குமே பெரும்பான்மை கிடைக்காது! தமிழகத்தில் தொங்கு சட்டசபை? : அமித் ஷா கணிப்பு