கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!
கரூர் தொகுதியில் தி.மு.க., வழங்கிய தங்கக்காசு தரம் குறைந்தது என பரவிய தகவலால், பதற்றமடைந்த மக்கள் அதன் தரத்தை சோதனை செய்ததுடன், குறைந்த விலைக்கு விற்றனர்.
கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில் தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட அரை கிராம் தங்கக்காசுகள் தரம் குறைந்தவை என்ற செய்தி பரவியதால், வாக்காளர்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகினர். பலர் உடனடியாக நகைக்கடைகளுக்கு சென்று தங்கத்தின் தரத்தை சோதித்து, 2000 ரூபாய்க்கு விற்று விட்டனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே நேரடி போட்டி நிலவியது. மாவட்டத்தில் சுமார் 92.65 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த உயர் ஓட்டுப்பதிவுக்கு இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு வழங்கிய பரிசுப் பொருட்களே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
கரூரில் கடந்த 17-ம் தேதி இரவு தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு 6000 ரூபாயும், அ.தி.மு.க. தரப்பில் 3000 ரூபாயும் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. 22-ம் தேதி இரவு முதல் தி.மு.க. சார்பில் அரை கிராம் தங்கக்காசும், அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் வெள்ளிக்காசும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கோவையில் 10க்கு 3 கன்பார்ம்!! கொங்கு கோட்டையில் விழும் ஓட்டை!! அதிமுக - பாஜ கூட்டணியை அசைக்கும் திமுக!
திடீரென சமூக வலைதளங்களில் “தி.மு.க. கொடுத்தது 9 காரட் 200 மில்லி தங்கக்காசு, 2000 ரூபாய்க்கு கூட விலை போகாது” என்ற செய்தி பரவியது. இதனால் பதறிப்போன வாக்காளர்கள் அருகிலுள்ள நகைக்கடைகளுக்கு படையெடுத்தனர். தங்கக்காசுகளை உரசிப் பார்த்தபோது, அவை உண்மையிலேயே 9 காரட் 200 மில்லி அளவிலான தரம் குறைந்த தங்கம் என்பது உறுதியானது.
பல வாக்காளர்கள் உடனடியாக அந்த தங்கக்காசுகளை 2000 ரூபாய்க்கு விற்று விட்டனர். இந்த தங்கக்காசுகள் சென்னை சவுகார்பேட்டையில் தயாரிக்கப்பட்டு கரூருக்கு கொண்டு வரப்பட்டதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர். சில வாக்காளர்கள் கூறுகையில், “எல்லா தங்கக்காசுகளும் ஒரே தரத்தில் இல்லை. சில மட்டுமே சொன்ன அளவுக்கு இருந்தன. பெரும்பாலானோர் வந்த விலைக்கு விற்று விட்டனர்” என்றனர்.
தி.மு.க. கொடுத்த தங்கக்காசுகளில் பிரச்சினை என்றதும், அ.தி.மு.க. வழங்கிய 4 கிராம் வெள்ளிக்காசுகளின் தரத்தையும் வாக்காளர்கள் சோதித்தனர். அவை 700 முதல் 1000 ரூபாய் வரை விலை போனதாக தெரிகிறது.
கரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜனும், அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் நேரடியாக மோதிய நிலையில், இந்த பரிசுப் பொருட்கள் சர்ச்சை பெரும் பேச்சாகியுள்ளது. தேர்தல் நடைமுறையில் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி! ஆர்.எஸ்.எஸ் தீவிர ஆலோசனை! கோவை தெற்கில் கோலோச்சுமா பாஜக?!