×
 

டெட் பாஸ் பண்ணவங்க கதி என்ன?  ஆசிரியர் தேர்வு அட்டவணை எங்கே? திமுக அரசை வெளுத்து வாங்கும் அன்புமணி!

2026-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு அட்டவணையை வெளியிடவும், 4 லட்சம் ஆசிரியர்களுக்காகச் சிறப்புத் தகுதித் தேர்வை நடத்தவும் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு அட்டவணையை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 4 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக 2026-ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய போட்டித் தேர்வுகளின் கால அட்டவணையை (Annual Planner) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இதுவரை வெளியிடாதது மிகுந்த அலட்சியப் போக்கு எனப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார். ஆசிரியர் பணிக்குச் செல்லத் துடிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, தேர்வு அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியிடப்படுவது மரபு. அப்போதுதான் தேர்வர்கள் தங்களை உரிய முறையில் தயார்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், 2026-ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ள சூழலில், முன்கூட்டியே திட்டமிட வேண்டிய ஆசிரியர் தேர்வு வாரியம் மௌனம் காப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. ஏற்கனவே 2025 செப்டம்பரில் வரவேண்டிய 1205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பும், நவம்பரில் வரவேண்டிய 51 வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான அறிவிப்பும் வெளியாகாமல் முடங்கிக் கிடப்பது ஆசிரியர் பட்டதாரிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “TNPSC வரலாற்றில் 20,471 வேலை இதுவே முதல் முறை!” கால அட்டவணை வெளியீடு! படிக்க ஆரம்பிங்க பாஸ்!

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக, 2011-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத சுமார் 4 லட்சம் ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் வரும் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணத் தமிழக அரசு கடந்த சில மாதங்களில் மூன்று முறை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. முதலில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறி மனுவைத் தாக்கல் செய்த அரசு, பின்னர் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பும் வெளியான சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது. கடைசியாக, சட்டத் திருத்தம் செய்யக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு முதல்வர் தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார்.

மற்ற வழக்குகளில் காட்டும் தீவிரத்தைச் சுமார் 4 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் திமுக அரசு காட்டவில்லை என்பது வேதனைக்குரியது. சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு 110 நாட்களாகியும் அதை விசாரணைக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதேபோல் பிரதமருக்குக் கடிதம் எழுதி 53 நாட்களாகியும் அதன் நிலை என்ன என்பது குறித்து அரசு மௌனம் காக்கிறது. எளிய பாடத்திட்டம் மற்றும் குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்களுடன் கூடிய சிறப்புத் தகுதித் தேர்வை அரசு நடத்தியிருந்தால், இந்த ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பார்கள். இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சிக் காலம் முடியவுள்ள நிலையில், நம்பிய ஆசிரியர்களை நட்டாற்றில் விடாமல், அவர்களின் நலனைக் காக்கச் சிறப்புத் தகுதித் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விடுபட்டவர்கள் கவனத்திற்கு! உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இன்றே கடைசி வாய்ப்பு.. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share