×
 

மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்ததில் என்ன தப்பு கண்டுபிடிச்சிட்டீங்க.? ஜனாதிபதி, மத்திய அரசை வறுத்தெடுத்த கி.வீரமணி!!

மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு வைத்தது அரசமைப்புச் சட்டம் 142–இன்படி மிகச் சரியானதே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு வைத்தது அரசமைப்புச் சட்டம் 142–இன்படி மிகச் சரியானதே என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்கள் மீது சட்டப்படி ஒப்புதல் அளித்திருக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து, அரசமைப்புச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் உணர்வுப்படி நடந்துகொள்ளாததோடு, தேவையற்று சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்து, மக்களால் 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த விடாமல் குந்தகம் விளைவித்தது நல்லெண்ணத்துடன் உள்ள செயல் அல்ல என்பது அனைவரும் அறிந்தது.



அதனால், சுமூகமான வகையில் ஆளுநரும் – முதலமைச்சரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் வாய்ப்புகளை கொடுத்தது. எனினும், அதனை முறையாகப் பயன்படுத்தித் தீர்வு காணாமல், விடாப்பிடியான நிலைப்பாட்டில் ஆளுநர் இருந்த காரணத்தால், 142 ஆவது பிரிவின் கீழ் உள்ள உச்ச நீதிமன்றத்திற்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர் ஒரு மாத கால அவகாசத்திலும், குடியரசுத் தலைவர் மூன்று மாத கால அவகாசத்திலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது சரியான சட்ட நடவடிக்கையே!
உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு சட்டப்படி சரியானதே! அரசமைப்புச் சட்டப் பிரிவு 142–இன்கீழ் தீர்ப்பளித்ததும், அது உடனே செயலாக்கத்திற்கு வந்ததும் ஓர் இக்கட்டான தேக்கத்திற்கு விடை கண்டது!

அண்மையில் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய் குறிப்பிட்டதுபோல், இந்திய அரசமைப்புச் சட்டம்தான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது என்பது சரியான பார்வை. முகப்புரைப்படி, இறையாண்மை அதிகாரம் இறுதியில் மக்களிடமே உள்ளது; வேறு எந்த பெரும் பதவியாளரிடமும் இருப்பதில்லை. தமிழ்நாடு அரசு போட்ட வழக்கில் அரசமைப்புச் சட்டப்படிதான் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோர் அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பைத் தந்துள்ளது!


குடியரசு துணைத் தலைவர் தவறாகக் குறிப்பிட்டதுபோல், உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் பணியைச் செய்யலாமா? என்று கேட்டது சரியல்ல. புதிதாக ஒன்றும் சட்டம் இயற்றவில்லை! உச்சநீதிமன்றம் அதனுடைய கடமையை Interpretation of Laws என்ற அதிகாரத்தின்படி சரியாக செயல்பட்டுள்ளது! புதிதாக சட்டம் இயற்றவில்லை; இருக்கின்ற 142 ஆவது பிரிவின்படியே அதில் உச்சநீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தைச் சரிவரப் பயன்படுத்தித்தான் தீர்ப்பு வழங்கி உள்ளது!

இதற்குமுன் இதே ஆளுநர் – பேரறிவாளன் வழக்கில் எடுத்த தவறான நிலைப்பாட்டினை, தலையில் ‘குட்டு வைத்து’ சொன்னதுபோல, மூன்று பேர் அமர்வு சுட்டிக்காட்டி, உடனடியாக விடுதலையைச் செய்துவிடுவதற்குப் பயன்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டப்படி இத்தீர்ப்பினை ஏற்க மறுத்தால், அதற்குமேல் மறுசீராய்வுதான் உள்ள ஒரே சட்டவழி!. அதே நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் – அதன்மீது தீர்ப்புக் கூறுவர் என்பது நடைமுறை. ஆனால், கொல்லைப்புற வழியாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை, குடியரசுத் தலைவர் செயல்படவிடாமல் தடுக்கலாமா? அதனைத் தவிர்த்து, கொல்லைப்புற வழியாக இந்தத் தீர்ப்பினைச் செயல்படவிடாமல் தடுக்க ஒரு குறுக்கு வழிபோலத்தான் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எந்த அடிப்படையில் கேக்குறீங்க.? ஜனாதிபதியை தெறிக்கவிட்ட திமுக கூட்டணி கட்சி!


அவருக்கு அப்படிக் கேட்கும் உரிமை எப்படி உள்ளது என்பதற்குரிய விடை 143 பிரிவின்கீழ் உள்ளது. 142 ஆவது கூறுப்படி உள்ள அதன் சிறப்பதிகாரத்தினை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது, ஒரு தீர்ப்பே தவிர, தனியே சட்டமியற்றிய செயல் அல்ல! 142 ஆவது கூறில் உள்ள சில முக்கிய சொற்கள், மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். ‘‘doing complete Justice!’’ – அதன்படி அப்பிரிவு உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே தரும் தனி சிறப்பதிகாரம் இது! எனவே, இதில் எந்த அதிகார மீறலும் நடைபெற்றுவிடவில்லை என்பது வெள்ளிடைமலை.

கூறு 142 (Article)பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இருவர் அமர்வு (ஜஸ்டிஸ் பரிதிவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் அமர்வு) தந்த 414 பக்க விரிவான விளக்கமான தீர்ப்பில்,
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142 ஆனது இந்திய உச்சநீதிமன்றத்திற்குத் தனது ஆளுமைக்குள் செயல்பட சிறப்பு அதிகாரத்தை அளிக்கிறது. அந்த அதிகாரத்தினைக் கொண்டு உரிய தீர்ப்பினையோ, உத்தரவினையோ அளிப்பதன்மூலம் தம்முன் விசாரணையில் உள்ள எந்தவொரு நீதிமன்ற ஆணைக்கும், விசயத்திற்கும் நிலுவையில் உள்ள வழக்கிற்குமான முழுமையான நீதியை வழங்கிட முடியும்.



தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக சுட்டிக்காட்டியபடி, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மறைமுகமாக முட்டுக்கட்டைபோல், செயல்படவிடாமல் தடுக்க முயலுவது அல்லாமல் வேறு என்ன? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்த துடிப்பதன் பின்னணி என்ன? குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களோ, மேலானவர்களோ அல்ல! இதுபோன்ற ஒரு செயல், சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் காலத்தில் அமைந்துள்ள நான்கு அமர்வுகளில், ஓர் அமர்வில் ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சாமிநாதன், ஜஸ்டிஸ் லட்சுமி நாராயணன் அமர்வு.

அந்தக் குறிப்பிட்ட அமர்வு – துணைவேந்தர்கள் நியமன உரிமை, தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் சட்டத்தை உறுதி செய்து, அரசமைப்புச் சட்டம் 142 இன்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய சட்டத்தை எதிர்த்து ஒரு வழக்கைப் பட்டியலிடப்பட்டு, அதை அவசர வழக்காக – விடுமுறை காலத்தின் அமர்வு விசாரிப்பதுடன், தமிழ்நாடு அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனு (Counter) போட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதுபோல கூறுவது எந்த நோக்கத்தோடு என்ற கேள்வி எழத்தானே செய்கிறது!

இந்த வழக்கை இந்த அமர்வு விரைவுபடுத்த அதற்கென்ன அவசியம்? அதுவும் விடுமுறை காலத்தில்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உயர்நீதிமன்ற அமர்வு தவறு என்று கூற முடியுமா, சட்டப்படி? இரண்டு வாரத்திற்குள் ஏதாவது தடையாணை போன்று வழங்கலாமா என்று கருதும் திட்டமோ என்கிற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது!

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற அமர்வு – அதுவும் விடுமுறைக் கால அமர்வு இப்படி விசாரித்து, ஏதாவது அவசர ஆணை பிறப்பிக்கத் துடிப்பது சட்டப்படி செல்லுமா? என்பதும் கேள்விக் குறி.
குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டு 14 கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில், அதே பிரச்சினையை மய்யப்படுத்தி உள்ள ஒரு வழக்கின் விசாரணைக்கு இப்போது உயர்நீதிமன்றம் மிகுந்த அவசரம் காட்டுவது, சட்டப்படியும், நியாயப்படியும் உகந்ததா?இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில், நடுநிலையாளர்களும், ஜனநாயக, அரசமைப்புச் சட்டப் பாதுகாவலர்களும் கூர்ந்து கவனித்தே வருகின்றனர். விரைவில் ‘பூனைக்குட்டி’ மெல்ல மெல்ல வெளியே வரும் என்பது உறுதி!"

இதையும் படிங்க: துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க முடியுமா.? பாயிண்டைப் பிடித்த பாஜக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share