சீருடையுடன் நடந்து சென்ற மயிலாடுதுறை டி.எஸ்.பி..! கொந்தளித்த அண்ணாமலை.. விளக்கமளித்த காவல்துறை..!
மயிலாடுதுறை டி.எஸ்.பி. சீருடையுடன் நடந்து சென்ற சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்றுள்ளது. இதனால், அவர் தனது வீட்டில் இருந்து காவல் சீருடையுடன் அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர், அனுமதியின்றி இயங்கிய 23 டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைத்து, சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுத்து, 1200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 700 பேரை சிறையில் அடைந்துள்ளார். இவரது கடமை உணர்வு பாராட்டப்பட்டாலும், வாகனம் திரும்பப் பெறப்பட்டது குறித்து காரணம் தெரிவிக்கப்படவில்லை என சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சர்ப்ரைஸ்..! முதல்வர் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்..!
இச்சம்பவம், காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அவர்களின் பணிச்சூழல் குறித்த விவாதங்களை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில், இது தி.மு.க. அரசின் நிர்வாகக் குறைபாடு என விமர்சிக்கப்பட்டாலும், காவல்துறை தரப்பு இதை மறுத்துள்ளது. இவ்விவகாரம் மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனம் எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப் பெறப்பட்டு, சீருடையுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.
மேலும், சுந்தரேசனின் நேர்மையான செயல்பாடுகள் திமுக அரசுக்கு பிடிக்கவில்லை எனவும், அவரை அவமானப்படுத்தும் நோக்கில் வாகனம் பறிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். “கடந்த ஆண்டு நவம்பர் முதல், 23 டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைத்து, 1200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 700 பேரை சிறையில் அடைத்தவர் சுந்தரேசன். இதனால், திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இதைச் செய்திருக்கிறது,” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி முக்கிய அலுவலுக்காக டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தைப் பெற்று மாற்று வாகனம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் டிஎஸ்பி சுந்தரேசன் பயன்படுத்தி வந்த வாகனமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை விளக்கமளித்துள்ளது. மேலும் இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையின் மருமகன் நான்..! பல கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் உரை..!