×
 

சி.எம். விஜய்க்கு பேரதிர்ச்சி... ஆய்வு செய்யும் போதே மின்வாரிய ஊழியர்கள் செய்த சம்பவம்...!

முதலமைச்சர் விஜய் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்றுது ஆய்வு மேற்கொண்டார். அவர் ஆய்வு மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், மின்சார வாரிய பணியாளர்கள் அலுவலகத்தின் பின்புற நுழைவாயில் பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார வாரிய பணியாளர் தேர்வு கொள்கையில் மாற்றம் கொண்டு வரக்கூடிய தமிழக அரசின் கொள்கை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டங்களில் போராட்டங்களை நடத்தியதாகவும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை அரசிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களை நியமிக்கும் முறையை கைவிட்டு, நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகளாக, பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: உயிர்காக்கும் மருந்து வாங்க துப்பில்லை... தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அவசியமா? - சி.எம்.விஜயை விளாசிய திமுக ஐடி விங்க்...!

ஆனால் தற்போது புதிதாக பணியாளர்களை நியமிப்பதில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இளைஞர்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 1,558 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய இருப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஒப்பந்த அடிப்படையில் 10,000 பேரை நியமிக்க இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நிரந்தர பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த சுமார் 9,600 பேர் வேலைவாய்ப்புக்காக தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்சார வாரியம் போன்ற அத்தியாவசிய சேவைத் துறையில் போதுமான பணியாளர்கள் இருப்பது மிகவும் அவசியம் என்றும், பராமரிப்புப் பணிகள், வளர்ச்சிப் பணிகள், மின்மாற்றிகள் அமைத்தல், கேபிள்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள போதுமான தொழிலாளர்கள் தேவை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரத்தை உற்பத்தி செய்து அல்லது வாங்கி வழங்குவது மட்டுமல்லாமல், அந்த மின்சாரத்தை வீடுகள், குடிசைப் பகுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கும் போதுமான பணியாளர்கள் தேவை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த நிலையை ஒரே நாளில் சரிசெய்துவிட முடியாது என்றும், முறையாக ஆய்வு செய்து எந்தெந்த இடங்களில் நிர்வாக ரீதியாக குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், மின்சார வாரிய ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு முதல் மின்சார வாரிய பணியாளர்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனிடையே, மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மின்சார வாரியத்தில் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவதாகவும், இரவு பகல் பாராமல், மழை மற்றும் புயலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் மின்சார தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மின்சார வாரியத்தில் ஒப்பந்தப்படி பணியாற்றி வரும் தொழிலாளர்களின் ஒப்பந்தத்தை மதித்து, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், படித்த இளைஞர்களுக்கு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

“வேலை செய்ய ஆட்கள் இல்லை; வேலை செய்ய தேவையான பொருட்களும் இல்லை. ஆனால் தினந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் மட்டும் நடத்தப்படுகின்றன” என்றும் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தற்போது மின்சார வாரிய அலுவலகத்தின் உள்ளே ஆய்வு மேற்கொண்டு இருந்த அதே சமயத்தில், அலுவலகத்தின் பின்புற நுழைவாயில் பகுதியில் ஆயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தப் போராட்டத்தை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பாக வாரியத் தலைவரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதாகவும், அமைச்சரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், முதலமைச்சரின் வருகையையொட்டி இதுவரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் எந்தவொரு கொள்கை முடிவும் எடுக்கக்கூடாது என்றும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் ஆய்வின் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஐ.டி.ஐ. படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிடு; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மின்சார தொழிலாளர்களுக்கு உடனடியாக அமல்படுத்து; மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடு; காலிப் பணியிடங்களை நிரப்பிடு” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share