×
 

"எடப்பாடி பழனிசாமியின் 5 நாள் ஆலோசனை... அதிமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்?"

எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கட்சியின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகிகளுடன் மீண்டும் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை தொடங்கியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜூலை 15 முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்று, தேர்தல் முடிவுகள், கட்சியின் அமைப்பு மற்றும் களப்பணிகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கிய ஆலோசனையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: விஜயை வீழ்த்த இதுதான் ப்ளான்!! இடைத்தேர்தலுக்கு குறி வைத்த எடப்பாடி பழனிசாமி! நிர்வாகிகளுக்கு உத்தரவு!

இந்த ஆலோசனைகள் அடுத்த ஐந்து நாட்கள் தொடரவுள்ளன. தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பூர், நாமக்கல், வட சென்னை, கோவை, திண்டுக்கல், விழுப்புரம், திருவாரூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன, எந்தெந்த பகுதிகளில் கட்சி பலவீனமடைந்தது, எதிர்காலத்தில் அமைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அதிமுக தொடர்ந்து எதிர்கொண்ட தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாக விளக்கம் கேட்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், களப்பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படாத நிர்வாகிகள், மாவட்ட அமைப்புகள் மற்றும் கட்சியின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் குறித்து கருத்துகள் பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நிறைவடைந்த பிறகு, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்பில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிமுக தலைமையிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த தொடர் ஆலோசனைக் கூட்டங்களின் முடிவில் வெளியாகும் முடிவுகள் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு முக்கியமான திசையை நிர்ணயிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் திட்டம் தயார்? எடப்பாடி பழனிசாமியின் புதிய வியூகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share