×
 

எப்படியும் தள்ளுபடி பண்ணிருவாங்க!? கூட்டுறவு வங்கியில் கடன் வாங்க முந்தியடிக்கும் மக்கள்!

அரசியல் கட்சிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பால், கூட்டுறவு வங்கிகளில் பலரும் கடன் வாங்கி வருகின்றனர். இதனால், கடந்த ஆண்டு ஏப்., முதல் டிச., வரை வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் தொகை, 85,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி வாக்குறுதிகள் மீண்டும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கும் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மட்டும் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய மொத்த கடன் தொகை 85,000 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 72,000 கோடி ரூபாயாக இருந்தது. 

அதாவது ஒரே ஆண்டில் 13,000 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன், நகை கடன், சுய உதவிக் குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறு வணிக கடன், வாகன கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் இதில் அடங்கும்.

இதையும் படிங்க: தேதி மாத்தியாச்சு! பிரதமர் மோடி தமிழக வருகையில் மாற்றம்!! நயினார் நாகேந்திரன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

குறிப்பாக, பயிர், கால்நடை வளர்ப்பு, மாற்றுத்திறனாளி பிரிவுகளில் கடன் வாங்கி குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தினால் 7 சதவீத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்ற கடன்களுக்கு 9 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ளதால், கடந்த தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியது போல, இம்முறையும் கடன் தள்ளுபடி அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் அதிக அளவில் கடன் பெறுகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே “மாற்றுத்திறனாளி கடன், சிறுபான்மையினர் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு போட்டியாக ஆளும் திமுகவும் விரைவில் புதிய தேர்தல் வாக்குறுதி அளிக்க தயாராகி வருகிறது.

கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “2021 தேர்தலில் திமுக அறிவித்த கடன் தள்ளுபடியை நிறைவேற்றுவதற்காக சமீபத்தில் வங்கிகளுக்கு முழு நிதி வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் அதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நபார்டு மற்றும் டெபாசிட் மூலமே கடன்கள் வழங்கப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக வங்கிகளை ஆதாயமாக்கக் கூடாது” என்று எச்சரித்தார்.

இதற்கிடையே, திருமணம் உள்ளிட்ட குடும்பச் செலவுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பும் கடன் விண்ணப்பங்களை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளால் வங்கிகளின் நிதி நிலைமை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு இதான் ப்ளான்!! இத ஃபலோ பண்ணுங்க! தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட சைலண்ட் ஆர்டர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share