மீண்டும் ஆட்சி அமைப்போம்... எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய EPS உறுதிமொழி...!
எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர் தமிழக அரசியலில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். திரைப்பட நட்சத்திரமாக உயர்ந்து, பின்னர் அரசியல் தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆனவர். அவரது அரசியல் பயணம், திராவிட இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கி, சொந்தக் கட்சி அமைத்து ஆட்சிப் பொறுப்பேற்கும் வரை நீண்டது.எம்.ஜி.ஆர். இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரசில் இணைந்திருந்தார்.
ஆனால், 1953ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட போது, அறிஞர் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி போன்றோரின் செல்வாக்கால் திமுகவில் இணைந்தார். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், பொருளாளராகவும் பணியாற்றினார். அவரது திரைப்பட புகழைப் பயன்படுத்தி, திமுகவை மக்கள் இயக்கமாக மாற்ற உதவினார். 1967ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்த போது, எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதலமைச்சரான போதும், எம்.ஜி.ஆர். கட்சியின் முக்கியத் தூணாக இருந்தார்.
பின்னர், அண்ணாதுரையின் பெயரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பின்னர், இது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றப்பட்டது. அதிமுக வேகமாக வளர்ந்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர் பட்டாளமே கட்சியின் அடித்தளமாக அமைந்தது. 1977ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக ஆட்சியை வீழ்த்தி, எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியாவிலேயே முதல் திரைப்பட நடிகர் முதலமைச்சரானார் என்ற சாதனையைப் படைத்தார். அவரது ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களால் நிறைந்தது. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஏழை குழந்தைகளின் கல்வியையும் ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்தினார். கிராமப்புற வளர்ச்சி, மகளிர் மேம்பாடு, மலிவு விலை வீடுகள் போன்ற திட்டங்களை அமல்படுத்தினார்.
இதையும் படிங்க: ஆதிக்கத்தை சுட்டெரித்த பேரொளி... என்றும் பெரியார் சமூக நீதிப் பாதையில்...! EPS புகழ் மகுடம்...!
பல்வேறு சாதனைகள் புரிந்து தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த எம்ஜிஆர் 38வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உறுதிமொழி வாசிக்க அனைத்து அதிமுகவினரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: EPS - பியூஷ் கோயல் சந்திப்பு நிறைவு... பேச்சுவார்த்தையில் சுமூகம்.. - நயினார்...!