×
 

அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

அதிமுகவில் பதவி பறிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் பதவி வழங்கி அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த உள்கட்சி அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுச்செயலாளர் இபிஎஸ் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளுக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, சில மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இபிஎஸ் தலைமையை விமர்சித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சண்முகம் தலைமையிலான அணியினர் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இதையடுத்து, அந்த அணியைச் சேர்ந்த 28 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பதவி நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியையும் உருவாக்கியது.

இதையும் படிங்க: இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது பலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம் தலைமை நிலையச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், தங்கமணி, கருப்பணன், சண்முகநாதன், அன்பழகன், காமராஜ், வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் எம்.ஆர். விஜயபாஸ்கர், மணிகண்டன் மற்றும் பல முன்னாள் நிர்வாகிகளுக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

எனினும், முன்னதாக பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவிகள் எவருக்கும் மீண்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக கட்சியின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த அதிருப்தியை குறைத்து, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒற்றுமையை வலுப்படுத்த இபிஎஸ் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: போறவங்க போகட்டும்! இனி பேசி புண்ணியம் இல்ல! அதிமுக நிர்வாகிகளிடம் புலம்பிய எடப்பாடி பழனிசாமி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share