சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!
'சொத்தை காப்பாற்ற, த.வெ.க., பக்கம் சென்றவர்கள், என் மீது வீண் பழி போடுகின்றனர்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சொத்தைக் காப்பாற்றுவதற்காக ஆளுங்கட்சிக்கு சென்றவர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இந்த கருத்துகளை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஈரோடு, திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சிலர், “திமுகவுடன் கூட்டணி அமைக்க நான் முயன்றேன்” என்று கூறி வருவதை மறுத்துள்ளார். எம்.ஜி.ஆர். திமுகவை எதிர்த்து அதிமுகவை தொடங்கியவர் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அதே அரசியல் பாதையில்தான் கட்சியை வழிநடத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அனுமதி இல்லாமல் யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது! அதிமுகவில் அதிரடி உத்தரவு!
“நானும் அதே கொள்கையில்தான் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறேன். ஆனால், தனிப்பட்ட நலனுக்காக கட்சியை விட்டு வெளியேறியவர்கள், தங்களது சொத்துக்களை பாதுகாக்க ஆளுங்கட்சியில் இணைந்து, என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. கட்சியை விட்டு சென்றவர்களை நினைத்து கவலைப்பட தேவையில்லை” என்றும் அவர் நிர்வாகிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டதால் மட்டுமே ஜெயகுமார் வெற்றி பெற்றார் என்றும், எதிர்காலத்தில் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதிமுகவே மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், இதுவரை ஆலோசனைக் கூட்டங்களை புறக்கணித்து வந்த அதிருப்தி அணியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனால், கட்சிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும், இது எடப்பாடி பழனிசாமி அணிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!