×
 

ஓய்வூதியத் திட்டம் ஒரு பூசி மெழுகும் வேலை! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!!

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்பது அரசு ஊழியர்களை ஏமாற்றும் ஒரு மிகப்பெரிய நாடகம் என்று எடப்பாடி கே. பழனிசாமி சாடியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது போராட்டம் இல்லாத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுகிறது; வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற அதிமுக பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய எடப்பாடியார், கிராமப்புறக் கலைஞர்கள் மற்றும் குதிரை நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டி வாழ்த்தினார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பொங்கல் கொண்டாடுவதைப் போல, இந்தத் தேர்தல் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வழி பிறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியின் தோல்விகளை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது மிகவும் வலிமையாக உள்ளது; இன்னும் சில கட்சிகள் விரைவில் கூட்டணியில் இணையும், அது உறுதியானதும் பகிரங்கமாக அறிவிப்போம் என்றார். திமுக கூட்டணியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், அங்கே நிலைமை சீராக இல்லை; காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்குமா என்பதே பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது" எனப் பொடி வைத்துப் பேசினார். அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்; மத்திய அரசின் திட்டத்தையே பூசி மெழுகி அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது பங்களிப்பு ஓய்வூதியத்தையே புதிய பெயரில் வழங்கியுள்ளனர். எங்களால் முடியாத திட்டங்களை நாங்கள் ஒருபோதும் அறிவிக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் முக்கிய துறைகளின் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

விவசாயிகளின் நலனைப் பற்றியும் சட்டம் ஒழுங்கு குறித்தும் பேசிய எடப்பாடியார், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் 100 ஏரி நிரப்பும் திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; ஒரு முழுநேர டிஜிபி-யைக் கூட நியமிக்க முடியாத நிலையில் இந்த விடியா அரசு உள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலிமையான ஆட்சி நடக்கும் சூழலில், தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொண்டு வரும். அடுத்த தைத்திருநாளில் அதிமுகவே ஆளுங்கட்சியாக இருக்கும் என மேச்சேரி மண்ணில் நின்று ஆவேசமாக முழங்கினார்.

இதையும் படிங்க: இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கலயா.. நாளைக்கும் இருக்கு..!! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share