முதல்வர் ஸ்டாலினின் Show-off ஆட்சி!! Back Off நிறுவனங்கள்! எடப்பாடி கிடுக்குப்பிடி!
கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தென்கொரியாவின் ஹ்வாசங் (Hwaseung) காலணி நிறுவனம் ரூ.1720 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஒப்புக்கொண்டு, மூன்று மாதங்களுக்குள் ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது. இதை வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஆட்சியால் தமிழகம் தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாறிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 2026-ல் அதிமுக ஆட்சி வந்தால் இழந்த தொழில்கள் மீண்டும் தமிழகத்தைத் தேடி வரும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஹ்வாசங் நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட உலகப் பிரபல பிராண்டுகளுக்கு சப்ளை செய்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இதைப் பெருமையாகப் பகிர்ந்து கொண்டார். ஆனால் தற்போது நிறுவனம் தமிழகத் திட்டத்தை கைவிட்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பத்தில் 100 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்கும் என்று அறிவித்த நிலையில், இப்போது ஆந்திராவில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பொம்மை முதல்வர் நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, முதலீட்டாளர் மாநாடுகள் என ‘ஷோ’ காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன்? வருவதாகச் சொன்ன நிறுவனங்களே பின் வாங்கும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.
இதையும் படிங்க: கிட்னி திருட்டு!! சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் அரசு! இபிஎஸ் ஆவேசம்!
இதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள் – அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும் வர்ணஜால விளம்பரங்களும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வருமா? பொம்மை முதல்வர் இப்படி என்றால், தொழில் துறை அமைச்சர் வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராகத் தான் இருக்கிறார்.
இத்தகைய வெறும் ‘ஷோ-ஆஃப்’ ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில் எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? தமிழ்நாடு ஒருகாலத்தில் தொழில்களுக்கான வாய்ப்புகளின் நிலமாக இருந்தது. இன்று அது தவறவிட்ட வாய்ப்புகளின் நிலம் – இது முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியின் மரபு. புதிய தொழில்களால் வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆனால் கதை இத்துடன் முடியவில்லை. தமிழ்நாடு மீண்டும் எழும், மறுமலர்ச்சி அடையும், தொழில் மகத்துவத்தை மீட்டெடுக்கும் – வரும் அதிமுக ஆட்சியில். இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில் வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் முதலீட்டாளர்களுக்கு விரைவான அனுமதி, சலுகைகள் வழங்குவதால் தமிழகம் போட்டியில் தோல்வியடைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசு இதுவரை இந்த விவகாரத்தில் அதிகாரபூர்வ பதில் அளிக்கவில்லை. ஆனால், இந்தச் சம்பவம் தொழில் கொள்கை மறுஆய்வுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுகவோ? தவெகவோ? நமக்கு 125 சீட்டு கன்பார்ம்!! தொகுதிகள் எவை எவை? காங்கிரஸில் தேர்தல் பணிகள் ஜரூர்!