"அதிமுக யாருக்கும் அடிமை அல்ல!" - ராகுல் காந்திக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை என்றும், சுயமரியாதை இன்றி திமுகவிடம் சரணடைந்து கிடப்பது காங்கிரஸ் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜகவின் அடிமையாக அதிமுக இருக்கிறது" என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி உள்ளிட்ட 5 தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருபோதும் யாருக்கும் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் வந்த அதிமுக ஒரு சுயமரியாதை உள்ள இயக்கம். எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் ராகுல் காந்தி பேசி வருகிறார்.
உண்மையில் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்தது அதிமுக அல்ல; திமுகவிடம் சரணடைந்துள்ள காங்கிரஸ் தான். காமராஜரைத் திமுகவினர் கொச்சையாகப் பேசியபோது கூட, அதைக் கண்டிக்கத் திராணி இல்லாமல் திமுகவிடம் மண்டியிட்டுக் கிடைக்கிறது காங்கிரஸ்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! திருச்செங்கோட்டில் இபிஎஸ் பரப்புரை..!
திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதி குடும்பத்திற்காகவே அந்தக் கட்சி நடத்தப்படுகிறது. உதயநிதிக்கு வழங்கப்பட்ட பதவி வாரிசு அரசியலின் அடையாளம். ஆனால், அதிமுகவில் ஒரு சாமானியத் தொண்டனும் தலைமைப் பதவிக்கு வர முடியும். இதுதான் உண்மையான ஜனநாயகம்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழகத்தில் திமுகவிற்காகப் பிரச்சாரம் செய்வதைக் கடுமையாக விமர்சித்த அவர், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பவர்களுடன் திமுக கைகோர்த்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத் துரோகம். தமிழகத்தின் உரிமைகளைத் திமுக அடகு வைத்துவிட்டது. 2ஜி ஊழல் முதல் தற்போதைய மதுபான விற்பனை முறைகேடுகள் வரை திமுகவின் 'விஞ்ஞான ஊழல்களை' மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்."
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்துவிட்டு, தற்போது பெண்களின் காவலன் போலத் திமுகவும் காங்கிரஸும் வேடமிடுவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரோடு மாவட்டம் என்றும் அதிமுகவின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!