×
 

“விளம்பரம் மட்டும் போதாது... எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது!” - விஜயை அதிரடியாக ‘ரோஸ்ட்’ செய்த செல்லூர் ராஜு!

வடிவேலு, நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும்; நடிகர் என்பதால் கூட்டம் சேருவதைக் கண்டு வியக்கத் தேவையில்லை எனச் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

வானத்தில் ஒரு சந்திரன், பூமியில் ஒரு ராமச்சந்திரன்! எம்.ஜி.ஆர் இடத்தைப் பிடிக்க எல்லாரும் நினைத்தால் அது நடக்காது” எனத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை சோழவந்தான் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய், கமலஹாசன் மற்றும் திமுக அரசு என முனையம் பாராமல் அனைவரையும் தனது பாணியில் ‘வெளுத்து’ வாங்கினார். குறிப்பாக, “நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும்; வடிவேலுவோ அல்லது நயன்தாராவோ வந்தாலும் மக்கள் வருவார்கள், அது வாக்குகளாக மாறாது” என அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை அமைப்பதற்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. இதனைத் தொடர்ந்து ஆவேசமாக உரையாற்றிய அவர், “திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என முதலமைச்சர் சொல்லக்கூடாது; சாமானியப் பெண்கள் சொல்ல வேண்டும். இன்று 5 வயது குழந்தை முதல் 85 வயது பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழலில்தான் உள்ளனர்” எனச் சாடினார்.

இதையும் படிங்க: "பூர்ண சந்திரன் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை" - மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி..!!

திமுக மற்றும் தவெக இடையேதான் 2026-ல் போட்டி என எழுந்துள்ள பேச்சுகளுக்குப் பதிலளித்த அவர், “நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. நேற்று மலேசியாவில் அவர் மக்களிடம் கேட்காமல் ரசிகர்களிடம் சினிமாவில் தொடர வேண்டுமா எனக் கேட்கிறார். விளம்பரம் எல்லாம் நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் ‘இந்தியன் 2’ படத்திற்கு விளம்பரம் எப்படி இருந்தது? படம் எப்படி இருந்தது? அதுபோல்தான் இதுவும். எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. பாக்கியராஜ் முதல் கமலஹாசன் வரை பலர் கட்சி ஆரம்பித்தார்கள். ஊழலை எதிர்ப்போம் எனப் பேசிய கமல், இன்று ஒரு சீட்டுக்காகக் கெஞ்சிப் போய்விட்டார். விஜய்க்கும் அந்த நிலை வரக்கூடாது” என எச்சரித்தார்.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி மீது புகார் தெரிவித்த செல்லூர் ராஜு, “அமைச்சர் மூர்த்தி எனது தொகுதியில் அதிகாரிகள் மூலம் பல்வேறு இடையூறுகளைத் தருகிறார். முல்லைப் பெரியார் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தாமல் மக்களைச் சாக்கடை நீரைக் குடிக்க வைக்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். “எடப்பாடியார் ஒன்றும் அடுக்கு மொழியில் பேசுபவர் இல்லை, அவரிடம் முகக் கவர்ச்சி இல்லை; ஆனால் அவர் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுகிறார். அதிமுக களத்தில் இல்லை எனச் சொல்பவர்கள் நாவடக்கிப் பேச வேண்டும். 2026-ல் எடப்பாடியார்தான் முதல்வர்; அப்போது இந்த அதிகாரத்தையும் ஆட்டத்தையும் காட்டும் அதிகாரிகள் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள்” என அவர் அதிரடியாக முழங்கினார்.
 

இதையும் படிங்க: #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share