ஓபிஎஸ் அணிக்கு அடுத்த அதிர்ச்சி..! இன்று திமுகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்?
ஓ. பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஒரு முக்கிய திருப்பம் அரங்கேற உள்ளது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
வைத்திலிங்கம் கடந்த சில வாரங்களாகவே ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி திமுகவில் இணையப் போவதாகப் பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது வைத்திலிங்கமும் அதே பாதையைப் பின்பற்றியுள்ளார். இன்று காலை 10:45 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் முறைப்படி இணைய உள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரும் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “விவசாயிகள் மீது அடக்குமுறையா?” கறிக்கோழி பண்ணையாளர்கள் கைதுக்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் டெல்டா பகுதியில் செல்வாக்கு மிக்க வைத்திலிங்கத்தின் இந்த இடப்பெயர்வு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிற்கும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், 234 தொகுதிகளையும் குறிவைத்துத் தேர்தல் வியூகம் வகுத்து வரும் திமுகவுக்கு, இது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பலத்தைத் தரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வைத்திலிங்கத்தின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் ‘அதிர்வலைகளை’ ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!