வினாத்தாள் கசிவுக்கு கடிவாளம்! தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா வரலாற்றில் புதிய மைல்கல்: அமித்ஷா புகழாரம்!
''வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா - 2026 நிறைவேற்றப்பட்டதன் மூலம், நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை செய்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள 'வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா - 2026' நிறைவேற்றப்பட்டிருப்பது, நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் தேர்வு அமைப்பின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து, மாணவர்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் பாதிக்க முயலும் சட்டவிரோத கும்பல்களுக்கு இந்த புதிய சட்டம் கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்வு முறைகளில் முறைகேடு செய்ய திட்டமிடுபவர்கள், வினாத்தாள்களை கசியவிடுபவர்கள் மற்றும் அதற்கு துணைபுரிபவர்கள் மீது மிகவும் கடுமையான தண்டனைகளை விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நேர்மையாக உழைத்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நம்பிக்கையை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வினாத்தாள் கசிவுக்கு இனி கடும் தண்டனை... 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்!
நாட்டின் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் அதிகரித்த நிலையில், தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு இந்த திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. புதிய சட்டம் அமலுக்கு வந்ததன் மூலம், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களின் கனவுகள் மற்றும் பல ஆண்டுகால உழைப்பு சிலரின் சட்டவிரோத செயல்களால் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும், புதிய சட்டம் அந்த நோக்கத்தை வலுப்படுத்தும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வு அமைப்பை மேலும் பாதுகாப்பாக மாற்ற இந்த சட்டம் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 9வது நாளாக முடங்கிய லோக்சபா... அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி!