திமுக, அதிமுக, தவெக தப்பல!! கொளுத்தி போட்டு விளையாடும் ஐ.டி. விங்குகள்! அதிர்ச்சியில் உறையும் கட்சிகள்!
உத்தேச தொகுதிகள் பங்கீடு பட்டியல்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி தி.மு.க., -அ.தி.மு.க., போன்ற கட்சிகளையும் அதிர வைக்கின்றன.
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கான உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்கள் வெளியாகி பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இப்பட்டியல்கள் போலியானவை என கட்சித் தலைவர்கள் மறுத்துள்ள நிலையில், இவை கட்சிகளுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு பட்டியலின்படி, திமுக கூட்டணியில் திமுகவுக்கு 184 தொகுதிகள், காங்கிரசுக்கு 15, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 15, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலை கழகம், ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதி என ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின், இபிஎஸ்-ஐ சந்திக்கும் தேமுதிக நிர்வாகிகள்! பிரேமலதா போடும் மாஸ்டர் ப்ளான்!
இதேபோல், அதிமுக-பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு 170, பாஜகவுக்கு 23, பாமகவுக்கு 23, தேமுதிகவுக்கு 6, அமமுகவுக்கு 6, ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3, தமாகவுக்கு 1 என மற்றொரு பட்டியல் பரவியது. இப்பட்டியல்கள் வைரலாகி, கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதற்கு பதிலளித்த அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன், “இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. எங்களுக்கு இதுபோன்ற தொகுதி பங்கீடு முடிவாகவில்லை” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். அதேபோல், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், தங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வரும் செய்திகளை மறுத்து, “எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் தெரிவிக்கவில்லை. இவை சமூக வலைதளங்களில் பரவும் ஊகங்களே” என்று கூறினார்.
அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “இந்தத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கட்சிகளின் ஐடி விங் பிரிவுகள், எதிரணி கூட்டணிகளை குழப்பும் நோக்கில் இதுபோன்ற போலி பட்டியல்களை வேண்டுமென்றே பரப்புகின்றன.
இதற்கு பதிலடியாக மற்ற கட்சிகளும் போஸ்ட்கள் போடுவதால் குழப்பம் அதிகரிக்கிறது. இதனால் கட்சிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுகிறது. உண்மை என்ன, போலி என்ன என்பதை அடுத்த நாள் நாளிதழ்களில் பார்த்த பிறகே தெரியவருகிறது” என்றனர்.
தற்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் கோரி வருவதால் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வருகைக்குப் பிறகு, சில கூட்டணி கட்சிகள் மாற்றம் குறித்து யோசிப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
அதிமுக-பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன், சசிகலா தரப்பை சேர்ப்பது குறித்து பாஜக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, பாஜக தரப்பில் பியூஷ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய போலி செய்திகள் அரசியல் கட்சிகளை உசுப்பேத்துவதாகவே உள்ளன. உண்மையான தொகுதி பங்கீடு முடிவுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்குப் பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேப்பரை எழுதி கொடுத்ததையே தப்பா படிக்கும் விஜய்!! வச்சு செய்யும் தி.மு.க., ஐ.டி.,அணி!! சத்யராஜ் மகள் கிண்டல்!