×
 
☰

முதல்வர் விஜய்யின் ‘வெற்றி பயணம்’ திட்டத்தால் புதிய பாதிப்பு! குமுறும் உள்ளூர் வியாபாரிகள்!

வாடிக்கையாளர்கள் நேரடியாக நகரங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கத் தொடங்கினால், உள்ளூர் கடைகளின் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

சென்னை: பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தின் விரிவாக்கத்தால், கிராமப்புறங்களில் உள்ள சிறு வணிகர்களின் விற்பனை பாதிக்கப்படுவதாகவும், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பெரிய கடைகளின் வியாபாரம் அதிகரித்து வருவதாகவும் முதற்கட்ட ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பெண்கள் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் வகையில் ‘விடியல் பயணம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 7,500 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் சராசரியாக 59 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை ‘வெற்றி பயணம்’ என்ற பெயரில் இம்மாதம் 2-ம் தேதி முதல் விரிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் குளிர்சாதனப் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகளிலும், மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டருக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி! ரூ.284 கோடி திட்டத்தில் திடீர் திருப்பம்!

இந்த விரிவாக்கத்தால், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் தங்கள் ஊர்களில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக, அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்டவற்றை மொத்த விலைக்கு விற்பனை செய்யும் பெரிய கடைகளைத் தேடி பெண்கள் குழுவாகச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதனால், பயணச் செலவு மிச்சமாவதுடன், பொருட்களையும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் வாங்க முடிவதாகப் பயனாளிகள் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு வணிகர்களுக்கு பாதிப்பா?

கிராமங்களில் கடை நடத்தும் சிறு வணிகர்கள், நகரங்களில் உள்ள பெரிய கடைகளிலிருந்து பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக நகரங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கத் தொடங்கினால், உள்ளூர் கடைகளின் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

அதேநேரத்தில், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள பெரிய கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிப்பதால் விற்பனை உயர்ந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் குடும்பத்துடன் பேருந்தில் செல்வது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்து அதிகாரிகள் மூலம் அரசு ஆய்வு செய்து வருவதாகவும், தற்போதைய தகவல்கள் முதற்கட்டமானவை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திட்டத்தின் உண்மையான பொருளாதாரத் தாக்கத்தை அறிய விரிவான ஆய்வு முடிவுகள் அவசியமாகும்.

இதையும் படிங்க: மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share