ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வழக்கை கையாள்வதில் அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருந்ததா, அப்படி இருந்தால் அதற்கு யார் காரணம் என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் சண்முகம் கூறினார்.
சென்னை: ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பாக திமுக ஆட்சி காலத்தில் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், ஜெம் வீரமணி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்ததற்கும், கைது நடவடிக்கை தீவிரமடைந்ததற்கும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மாவின் உத்தரவுகளே முக்கிய காரணம் என்று கூறினார். வழக்கை அதிமுக, திமுக, தவெக ஆகிய மூன்று ஆட்சிகளும் முறையாக கையாளவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்னர், வழக்கில் ஏன் தொடர்ந்து விசாரணை நடத்தப்படவில்லை என்று சண்முகம் கேள்வி எழுப்பினார். வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லை என்ற காரணத்தை மட்டும் கூறி இத்தகைய தீவிரமான வழக்கை முடிக்க முயன்றது குறித்து விசாரணை தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீரமணி வழக்கில் அடுத்த அதிரடி! சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையீடு! திடீர் திருப்பம்!
முன்னாள் விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி போலீசார் முடிவு அறிக்கை தாக்கல் செய்திருந்ததாகவும், பின்னர் போக்சோ நீதிமன்றம் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கை கையாள்வதில் அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருந்ததா, அப்படி இருந்தால் அதற்கு யார் காரணம் என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் சண்முகம் கூறினார். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீதான விசாரணையும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது ஆட்சி காலத்தில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை என்று மு.க. ஸ்டாலின் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வழக்கில் உண்மையில் என்ன நடந்தது, முந்தைய விசாரணையில் குறைபாடுகள் இருந்தனவா, அதிகாரிகள் மீது ஏதேனும் அழுத்தம் இருந்ததா என்பவை விசாரணையின் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே சண்முகத்தின் கோரிக்கையாக உள்ளது. உயர் நீதிமன்ற கண்காணிப்புடன் காலவரையறை நிர்ணயித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய விசாரணை! புதிய திருப்பம்!