அன்புமணியால் ராமதாஸ் வேதனை! அதிமுக - பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை - ஜி.கே.மணி
அதிமுக தரப்பிலிருந்து இதுவரை பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், பாஜக தரப்பிலிருந்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் எதுவும் வரவில்லை என்றும் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள பாமகவின் மிக முக்கியமான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை (லோகோ) பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் இன்று வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "2025-ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, 2026-ஆம் ஆண்டை வரவேற்கும் இந்தச் சேலம் பொதுக்குழு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இக்கூட்டத்தில்தான் 2026 தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணிக் குறித்து அய்யா ராமதாஸ் அவர்கள் இறுதி அறிவிப்பை வெளியிடப்போகிறார். அவர் இருக்கும் கூட்டணிதான் வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில் ஜி.கே.மணி மிகுந்த ஆவேசமடைந்தார். "ராமதாஸ் அறிவித்துள்ள பொதுக்குழு செல்லாது என அன்புமணி கூறுவது அபத்தமானது. இது நாடே பாராட்டும் ஒரு பெரும் போராளியைக் கொச்சைப்படுத்தும் செயல். தான் ஆசையாய் வளர்த்த மகனின் இத்தகைய போக்கைக் கண்டு மருத்துவர் ராமதாஸ் இன்று வேதனையோடு கண்கலங்குகிறார். 2025 மே மாதத்துடனேயே அன்புமணியின் பதவி காலம் முடிந்துவிட்டது. பாமகவின் தலைவர் யார் என்பதை நீதிமன்றத்தில் முடிவு செய்யுங்கள் எனத் தேர்தல் ஆணையமே கூறிவிட்ட பிறகு, நான்தான் தலைவர் என அன்புமணி மார்தட்டுவது நகைப்பிற்குரியது எனச் சாடினார்.
அன்புமணியைச் சுற்றியிருக்கும் சிலர் அவரைத் தவறாக வழிநடத்தி, ராமதாஸை ஒருமையில் பேச வைப்பதாகவும், அவர்களைக் கடுமையாக எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். "பாமகவின் அடையாளம் ராமதாஸ் மட்டுமே. கட்சியில் நிலவிய சில நெருக்கடி நிலைகளால் கூட்டணி முடிவு தள்ளிப்போனது. இருப்பினும் மாம்பழச் சின்னம் நமக்குத்தான் கிடைக்கும். பாஜகவோ அல்லது வேறு எவரோ அய்யாவுக்கும் அன்புமணிக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வரும் 29-ஆம் தேதி பொதுக்குழுவிற்கு 4,200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அய்யாவுடன் உறுதியாக நிற்கும் எங்களை இழிவுபடுத்துபவர்களுக்குப் பொதுக்குழுவில் பதில் கிடைக்கும்" எனத் தனது அரசியலை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்!
இதையும் படிங்க: "அதிமுக - திமுக ரகசியக் கூட்டணி?" அதிமுகவின் முகத்திரையை கிழித்த தவெக நிர்மல்குமார்!!