எங்களுக்கு 12 சீட்டு கொடுத்திருங்க!! அதிமுக - பாஜக கூட்டணிக்கு தமாக நெருக்கடி!! வாசன் புது ரூட்!!
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்க, த.மா.கா., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வலுப்பெறும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சி முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், இதே கூட்டணியில் த.மா.கா. ஆறு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது. அதன்பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து மூன்று தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.
தற்போது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வரும் சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளை கேட்டுள்ளார். மேலும், அந்தத் தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவும் விரும்புகிறார். வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தவெகவா? திமுகவா? யாருடன் கூட்டணி?! காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வைத்த ட்வீஸ்ட்!!
இந்தத் தகவலை, அ.தி.மு.க. மூத்தத் தலைவர்கள் மூலம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. நிர்வாகிகள் கூறுகையில், வாசனின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வரும் ஏப்ரலில் முடிவடைகிறது. கட்சியினர் அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்க வேண்டும் என விரும்பினாலும், வாசன் தற்போது மாநில அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைந்தால், வாசனுக்கு முக்கியத் துறை ஒதுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நம்பிக்கைக்குரிய பாலமாக வாசன் செயல்பட்டு வருகிறார். கூட்டணி மீண்டும் உருவாவதற்கு அவரது பங்கு முக்கியமானது.
எனவே, கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, 12 தொகுதிகளுக்கு வாய்ப்பு பெற்றுத் தர வாசன் முடிவு செய்துள்ளார். தொகுதிப் பட்டியல் பொங்கலுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமைக்கு அளிக்கப்பட்டு, உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கடன் நிலை கவலைக்கிடம்!! திமுகவை வம்பிழுக்கு காங்., நிர்வாகி! பிரவீன் சக்ரவர்த்தி!