எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! செங்கோட்டையன் தோற்கணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் இபிஎஸ்!
செங்கோட்டையனை துரோகியாக கருதும் பழனிசாமி அவரை தோற்கடிக்க கங்கணம் கட்டி வெவ்வேறு வியூகங்களுடன் களமிறங்கியுள்ளார்.
மூத்த அரசியல்வாதியும், கோபி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்த பிறகு அமைதியாக இருந்த நிலையில், கோபி தொகுதியில் இப்போது பெரும் அரசியல் போர் மூண்டுள்ளது.
த.வெ.க. சார்பில் கோபியில் களமிறங்கி வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள செங்கோட்டையன், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களமிறங்கியுள்ளார். செங்கோட்டையனை “துரோகி” எனக் கருதும் பழனிசாமி, அவரை எந்த விலையைக் கொடுத்தும் தோற்கடிக்க வேண்டும் என உறுதியாக உள்ளார்.
அதிமுகவில் செங்கோட்டையன் இருந்தபோது அவருக்கு விசுவாசமாக இருந்த சில நிர்வாகிகள் மட்டுமே அவருடன் த.வெ.க.வுக்கு வந்தனர். பெரும்பாலான ஆதரவாளர்கள் இன்னும் அதிமுகவிலேயே உள்ளனர். இந்த நிலையை பயன்படுத்தி, செங்கோட்டையன் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து அவருக்கு எதிராக திருப்பும் பணியை பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு 80 சீட்டு, துணை முதல்வர் பதவி - தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஓபன் டாக்...!
மேலும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி அல்லது தங்கமணியை கோபி தொகுதி பொறுப்பாளராக நியமித்து, வலுவான எதிர்ப்பை உருவாக்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். “எந்த சூழலிலும் செங்கோட்டையன் வெற்றி பெறக் கூடாது. அதற்கு எவ்வளவு செலவானாலும் தயார்” என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், தி.மு.க.விலும் கோபி தொகுதிக்கு வேட்பாளர் தேர்வில் பல்வேறு பெயர்கள் அலையடிக்கின்றன. வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம், மணிமாறன் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர்.
செங்கோட்டையன் தரப்பில், தி.மு.க. – அதிமுக இரு கூட்டணிகளும் டம்மி வேட்பாளர்களை நிறுத்தினால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் பழனிசாமியின் தீவிர எதிர்ப்பு காரணமாக செங்கோட்டையனுக்கு இது கடும் சவாலாக மாறியுள்ளது.
கோபி தொகுதியில் செங்கோட்டையன் – பழனிசாமி இடையேயான இந்த மோதல் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!