உயிரை காக்க உடனே வெளியேறுங்கள்! லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தற்போது லெபனான் நாட்டிற்குள் தரைவழிப் படைகளை அனுப்பி தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது இஸ்ரேலிய ராணுவம் (IDF) தெற்கு லெபனானுக்குள் தரைவழியாகப் புகுந்து தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மார்ச் 3 அன்று அதிகாலை முதல் இஸ்ரேலிய தரைப்படை வீரர்கள் தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளைத் தாண்டி உள்ளே நுழைந்துள்ளனர். இதனை 'முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை' என இஸ்ரேல் அழைத்தாலும், லெபனான் எல்லைக் கிராமங்களில் இஸ்ரேலிய வீரர்கள் நிலைகொண்டு சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தெற்கு லெபனானில் உள்ள சஃபரான்ட் (Sarafand), கரேயப் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்துத் தீவிரத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!
நிலைமை மோசமடைந்து வருவதால், லெபனான் பிரதமர் நவாப் சலாம், ஹிஸ்புல்லா அமைப்பின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளதோடு, எல்லையில் இருந்து லெபனான் ராணுவத்தை பின்வாங்க உத்தரவிட்டுள்ளார். எனினும், பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் போரினால் இதுவரை லெபனானில் இருந்து 31,000-க்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் ஐநா அமைதிப்படை (UNIFIL) வீரர்கள் இருக்கும் பகுதிகளிலும் இஸ்ரேலிய நடமாட்டம் காணப்படுவதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் லெபனானுக்குள் 5 முக்கிய இடங்களைக் கைப்பற்றி பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி வருவதால், இந்தப் போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக முழக்கம்! ஈரானுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்ட அரசியல் கட்சிகள்!