மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான்தான் எனப் பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வடசென்னையின் வளர்ச்சிக்காகத் தமது அரசு முன்னெடுத்துள்ள சிறப்புத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எபினேசரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொருக்குப்பேட்டை பகுதிக்கு வருகை தந்தார். அங்குத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சென்னை மாநகருடனான தனது நீண்டகாலத் தொடர்பையும், வடசென்னைக்கான சிறப்புத் திட்டங்களையும் பட்டியலிட்டார்.
தமது அரசியல் பயணத்தின் தொடக்க கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட முதலமைச்சர், முன்பு மேயர் பதவி ஒரு ஆண்டுதான், கவுன்சிலர்கள் தான் மேயரைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் 1996-ல் கலைஞர் தான் மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்."
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் நான் தான். 40 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றேன். நான் இரண்டாவது முறை மேயராகவும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தபோது, எனக்காகவே ஒருவர் இரண்டு பொறுப்புகளில் இருக்கக் கூடாது என ஜெயலலிதா சட்டம் கொண்டு வந்தார். மேயராக இருந்தபோது பாலங்கள், பள்ளிகள் மேம்பாடு எனப் பல பணிகளைச் செய்ததை நினைவுகூர்ந்த அவர், வடசென்னை புறக்கணிக்கப்படுவதைத் தடுக்கத் தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!
நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால் தென் சென்னை அளவிற்கு வடசென்னை வளர்ச்சியடையாமல் இருந்தது. அந்த இடைவெளியைக் குறைக்கவே 'வடசென்னை வளர்ச்சித் திட்டம்' மூலம் தற்போது பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய முதலமைச்சர், பெண்களுக்கான திட்டங்கள் குறித்துக் குறிப்பிடும்போது கலகலப்பாகப் பேசினார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் மற்றும் புதிதாக 'இல்லத்தரசி திட்டம்' செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
இல்லத்தரசி திட்டத்தில் கிடைக்கும் பணத்தில் என்ன வாங்கலாம் என உங்கள் கணவர்களிடம் கேட்காதீர்கள். அவர்கள் உங்களைக் குழப்பி விடுவார்கள்! உங்களுக்குள் ஏதேனும் பிரச்சினை வந்தால் என்னிடம் சொல்லுங்கள், உங்கள் அண்ணனாக நான் இருக்கிறேன் என அவர் கூறியபோது அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். நாளை மாலை பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த ஆர்.கே.நகர் பயணம் வடசென்னை வாக்காளர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!