கல்லத்தி மரத்தில் பறக்கும் பிறைகொடி! தலவிருட்சத்தில் இப்படியா? இந்து மக்கள் கட்சி கண்டனம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மேல் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காக இஸ்லாமியர்கள் நிலா பிறை கொடியை ஏற்றியதற்கு ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கண்டனம் தெரிவித்தார்.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்காக இஸ்லாமியர்கள் நிலாப்பிறை கொடியை ஏற்றியதற்கு ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு அரசு அதிகாரிகளும் கோயில் நிர்வாகமும் உடந்தையாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த போதிலும், திமுக அரசு போலீசார் மூலம் அதைத் தடுத்து நிறுத்தியது.
அதே மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவுக்கு கொடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாகவே, கல்லத்தி மரத்தில் கொடியேற்றுவதைத் தடுக்க கோயில் நிர்வாகம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., கோயில் போலீஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனு அளித்திருந்தது.
இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா? திமுகவை வெளுத்து வாங்கும் பாஜ தலைவர் நயினார்!!
ஆனால், திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதிக் கூட்டத்தில் கோயில் நிர்வாகம், போலீசார், தர்கா நிர்வாகத்தினர் மட்டும் அழைக்கப்பட்டனர். ஹிந்து அமைப்புகள், தொல்லியல் துறை, ஊர் பொதுமக்கள் ஆகியோரை அழைக்கவில்லை. இந்தக் கூட்டத்தில் வழக்கம் போல கல்லத்தி மரத்தில் கொடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இதை சோலை கண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது அறிக்கையில் சோலை கண்ணன், “சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் கொடியேற்ற எதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்? தர்கா நிர்வாகம் மரத்தை ஆக்கிரமிப்பதற்கு ஆர்.டி.ஓ., மற்றும் கோயில் நிர்வாகம் பல ஆண்டுகளாக மறைமுகமாக உடந்தையாக இருந்து வருகின்றன. இது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
அமைதிக் கூட்டம் என்ற பெயரில் அனைத்துத் தரப்பினரையும் அழைக்காமல் நடத்தியது சரியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சம்பவம் ஹிந்து அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதால், அதில் வேறு மத விழாக்களுக்கு அனுமதி அளிப்பது சரியல்ல என்று ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்ற சர்ச்சைகள் அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக அரசு மத நல்லிணக்கத்தை காப்பதாகக் கூறிக்கொண்டு ஹிந்து உரிமைகளை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா? திமுகவை வெளுத்து வாங்கும் பாஜ தலைவர் நயினார்!!