×
 

ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பு உள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம்

தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் செயல்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் திட்டத்திற்காக ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கைதானவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியாக, ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசி, அவர் மறுத்ததைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஐபிடிஎஸ் அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

 

கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்று வரும் விசாரணையில், இந்த முழு நடவடிக்கைக்கும் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இருந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏவையும் தனித்தனியாக அணுகி தங்கள் தரப்புக்கு இழுக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டதாகவும், அதற்காக திருநாவுக்கரசு மூலம் முதற்கட்டமாக இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்கும் முயற்சிக்காக ரூ.180 கோடி வரை தனியாக ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், இந்த நடவடிக்கைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஓட்டலுக்கு தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களை தங்கள் தரப்புக்கு மாற்றும் முயற்சியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கட்சியின் எம்எல்ஏக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தகவல் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து தொடர்புடையவர்கள் அறைகளை அவசரமாக காலி செய்து வெளியேறியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணையில், இந்தத் திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் கார்ப்பரேட் நிறுவனம் எது, அதன் உரிமையாளர்கள் யார், அரசை கவிழ்க்கும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் நோக்கம் என்ன, ரூ.180 கோடி நிதியை வழங்கியது யார், இந்த நடவடிக்கையில் நிறுவனத்திற்கு ஏதேனும் கமிஷன் அல்லது பிற நிதி பலன் உறுதி செய்யப்பட்டிருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள அசோக் குமாரை கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அமைச்சர் மரிய வில்சனுக்கு சட்ட சிக்கல்..! அண்ணனை தாக்கிய வழக்கு... புதுவை கோர்ட் அதிரடி உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share