கனவாய் போன ஓசூர் ஏர்போர்ட்!!! பின்னணியில் சந்திரபாபு நாயுடு! ஆந்திராவுக்கு கைமாறிய அசைன்மெண்ட்!
ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு, ராணுவ அமைச்சகம் கைவிரித்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம், குப்பத்தில் விமான நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது. இதற்காக, 1,250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
சென்னை: தமிழகத்தின் ஓசூர் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய ராணுவ அமைச்சகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவின் குப்பத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக 1,250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இது தமிழக எல்லை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக - கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள ஓசூர் நகரத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் போக்குவரத்துக்கு உதவும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டம் 2021 டிசம்பரில் தொடங்கியது. தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம் சாத்தியமான இடங்களை கண்டறிய ஆலோசகர்களை நியமித்தது.
2024 ஜூன் 27 அன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் 2,000 ஏக்கர் நிலத்தில் ஓசூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இது ஓசூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆட்டு மந்தையில் ஓநாய்..! பெண்கள் பாதுகாப்பை சூறையாடும் திமுக... நயினார் தாக்கு..!
ஆனால், ஓசூரிலிருந்து பெங்களூரு கெம்பே கவுடா பன்னாட்டு விமான நிலையம் 75 கி.மீ. தொலைவில் உள்ளது. 2008-ல் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பெங்களூரு விமான நிலையத்தைச் சுற்றி 150 கி.மீ. தொலைவுக்குள் வேறு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. இது 2033 வரை அமலில் இருக்கும்.
இருப்பினும், அனுமதி பெற்று 2033-க்குப் பின் விமான நிலையத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. வான்வெளி அனுமதிக்காக ராணுவ அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. ஆனால், ஓசூர் அருகே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் இயங்குவதால், ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சோதனை செய்யப்படுகின்றன. இங்கு பயணிகள் விமான நிலையம் அமைந்தால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவின் குப்பம் பகுதியில் (ராமகுப்பம் மண்டலம், விஜிலாபுரம்) 2019 ஜனவரி 3-ல் அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 430 ஏக்கர் நிலத்தில் விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றத்தால் திட்டம் தாமதமானது.
2024 சட்டமன்றத் தேர்தலில் வென்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சரானார். தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார். சமீபத்தில் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் சர்வதேச விமானங்கள் அதிகரிக்கும் வகையில் விமான நிலையங்கள் அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
இதையடுத்து, ஆந்திராவில் குப்பம், தகதர்த்தி, ஸ்ரீகாகுளம், தடேபள்ளிகுடேம், நாகார்ஜுன சாகர், துனி-அண்ணாவரம், ஓங்கோல் ஆகிய 7 இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. உயர்மட்ட கூட்டத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர். குப்பம் விமான நிலைய பணிகள் தொடங்கி, 1,250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகியுள்ளது. இத்திட்டம் 2027-ல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம் 36 கி.மீ. தொலைவிலும், ஓசூரிலிருந்து 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மக்கள் குப்பம் விமான நிலையத்தை பயன்படுத்தலாம் என்று ஆந்திர அரசு கூறுகிறது.
பெங்களூரு விமான நிலையத்துக்கு 75 கி.மீ. தொலைவில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 3 மணி நேரம் ஆகிறது. ஆனால் குப்பத்துக்கு சாலை வசதி சிறப்பாக உள்ளது. இதனால் ஓசூர் திட்டம் சந்தேகமாகியுள்ளது. குப்பத்துக்கு அனுமதி அளிக்கவே ஓசூருக்கு மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அனுமதியின்றி மஞ்சுவிரட்டு…! பறிபோன உயிர்கள்..! சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!