வார்த்தை ஜாலங்கள் பலிக்காது - விஜய்யை அரசியல்வாதியாக ஏற்க முடியாது - நெல்லையில் சரத்குமார் அதிரடி!
விஜய் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம், ஆனால் அவரை இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என நெல்லையில் பாஜக நிர்வாகி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான சரத்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் ஒரு நடிகராக வளர்ந்திருக்கலாம், ஆனால் இன்னும் முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை எனப் பதிலளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவரை என்னால் இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் களத்திற்கு வந்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், ஒரு அரசியல்வாதிக்கான கொள்கை, நெறிமுறை மற்றும் செயல்பாடுகள் அவரிடம் எங்கே இருக்கிறது? 'அனைவருக்கும் வீடு கட்டித் தருவேன், பொருளாதார வலிமையை உருவாக்குவேன்' என்றெல்லாம் மேடையில் பேசுவது எளிது. ஆனால், அதனை எப்படிச் சாத்தியப்படுத்தப் போகிறீர்கள் என்ற தெளிவான திட்டங்கள் அவரிடம் இல்லை" என்று சாடினார்.
தொடர்ந்து தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்துப் பேசிய அவர், "தமிழகம் இன்று 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கல்களை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள்? மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்க உங்களிடம் உள்ள தீர்வு என்ன? வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது யாருக்கும் எளிது, ஆனால் தீர்வுகளை முன்வைப்பவரே உண்மையான தலைவன். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒளி பிறக்கும்' என்று சொல்வதையெல்லாம் விட்டுவிட்டு, அதற்கான செயல்முறைத் திட்டங்களை விஜய் முன்வைக்கட்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு உண்டு" என்று குறிப்பிட்டார். நெல்லை மாவட்ட பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேட்டி, விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் முறையாக.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்..!!
இதையும் படிங்க: "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!