×
 
☰

கொள்கை என்பது சொல் அல்ல, செயல்! தவெகவில் 15 பெண் எம்.எல்.ஏ-க்கள் என ஐடி விங் பெருமிதம்!

தவெகவில் மொத்தம் 15 பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர் கொள்கை என்பது சொல் அல்ல செயல் என தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் முறைப்படி பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளதாகவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கொள்கை என்பது சொல் அல்ல, செயல் என்பதைத் தவெக அரசு மெய்ப்பித்துக் காட்டியுள்ளதாகவும் தவெகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் இருவரும் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சிறப்புப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வென்ற இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இப்போது தவெகவில் மொத்தம் 15 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்! பெண் உரிமை, சமத்துவம், சமூகநீதி எனத் தந்தை பெரியாரின் கொள்கைப் பாதையில் உறுதியுடன் பயணிக்கும் நமது வெற்றித் தலைவர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெண்கள் அதிகாரம் பெறுவதை உறுதி செய்யும் உன்னதச் செயலைச் செவ்வனே ஆற்றி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மின் கொள்முதல்..!! தமிழ்நாட்டை வாட்டும் மின்வெட்டு..! தமிழக அரசு முடிவு..!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சாடும் வகையில், "பெரியாரின் பெயரை வெறும் பெயரளவில் மட்டுமே சொல்லிக்கொண்டு, ஆபாச அரசியலையும் தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களையும் அடிநாதமாகக் கொண்டு இயங்கும் கட்சிகளுக்கு மத்தியில், பெண்களின் மரியாதையையும் மாண்பையும் பாதுகாப்பதில் தவெகவின் பாங்கும் பங்கும் அளப்பரியது" என்று அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், "கொள்கை என்பது வெறும் பேச்சளவில் இருக்கும் சொல் அல்ல; அது களத்தில் நிகழ்த்திக் காட்டும் செயல்! அந்தக் கொள்கைப் பயணத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியே நமது தலைவர் தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு முழு அதிகாரமளிப்பதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஆகும்" என்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..! "பெரியார் அறிவுலகம்".! திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share