பீகார் போன முதல்வர் ஸ்டாலின்.. கனிமொழி எம்.பி போட்ட பதிவு.. சூடுபிடிக்கும் அரசியல்..!!
'இந்தியாவின் எதிர்காலம்' என ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் போட்டோவை பகிர்ந்துள்ளார் கனிமொழி எம்.பி.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பீகாரில் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’யை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி அன்று தொடங்கினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. 16 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, பீகாரின் 20 மாவட்டங்களை உள்ளடக்கி, 1,300 கி.மீ. தொலைவைக் கடக்க உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி பாட்னாவில் இந்த யாத்திரை நிறைவடைகிறது.
ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக ஆதாரங்களுடன் தெரிவித்து, இந்த யாத்திரையைத் தொடங்கினார்.
இதையும் படிங்க: எங்க புள்ளைய கொன்னுட்டானுங்க மா! கனிமொழி எம்.பியிடம் கவின் குடும்பத்தார் புகார்..!
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுடன் இணைந்து, மக்களை நேரடியாகச் சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதற்கு ஆதரவாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்பங்காவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் கலந்துகொண்டார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பீகாருக்கு வந்த அவர், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருடன் இணைந்து இந்தப் பயணத்தில் பங்கேற்றார். இந்த யாத்திரையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
மு.க.ஸ்டாலின், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், வாக்காளர் உரிமைகளை உறுதிப்படுத்தவும் இந்த யாத்திரை முக்கியமானது எனக் குறிப்பிட்டார். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான இந்தப் போராட்டம், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்வை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்தியாவின் எதிர்காலம் என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் இன்னும் அரசியலில் வளரவில்லை.. ஒரே போடாக போட்ட சரத்குமார்..!!