பிரதமர் வர்ற நேரத்துல இப்படி ஒரு ரகளையா? மாவட்டத் தலைவர் கார் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை!
பிரதமர் மோடியின் மாநாட்டிற்கு ஆட்களைத் திரட்ட வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் தொடர்பான இந்தப் பிரிவு மோதல், பிரதமர் தமிழகம் வரும் வேளையில் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ள பிரம்மாண்ட மாநாட்டிற்கு ஆட்களைத் திரட்டி வருவதற்காக வழங்கப்பட்ட பண விவகாரத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜகவில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு ஆகியோர் தனது வீட்டிற்கு ஆட்களை அனுப்பி வாகனங்களை அடித்து உடைத்ததாக, மாவட்டத் தலைவர் தர்மராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண விவகாரத்தால் வெடித்த மோதல்: மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் மாநாட்டிற்கு, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காகக் கட்சி மேலிடம் சார்பில் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் பணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சனை முற்றிய நிலையில், இன்று காலை தர்மராஜின் வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளது.
தனது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததோடு, தமக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாநில துணைத் தலைவர் ஏ.ஜி. சம்பத் மற்றும் தென்னரசு உட்படச் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வான ஏ.ஜி. சம்பத், கடந்த 2021-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !
பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், ஆளும் தரப்பிற்குப் போட்டியாகப் பலத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பொது இடத்திலேயே மோதிக்கொள்வது அக்கட்சியின் மேலிடத்தைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி ரீதியாக எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து மாநிலத் தலைமை மௌனம் காத்து வருகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் Red Zone அமல்! டிரோன்கள் பறக்கத் தடை!