×
 

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் ஏன்?" - நடிகை கஸ்தூரி காரசாரமான கேள்வி!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், நடிகர் விஜய் மௌனம் காப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என நடிகை கஸ்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகை கஸ்தூரி இன்று மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரை நோக்கி அடுக்கடுக்கான ‘கறார்’ கேள்விகளை முன்வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, "ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்த தீபத்தூணை, கனிமொழி எம்பி ‘சர்வே கல்’ என்று கொச்சைப்படுத்துகிறார். சர்வே கல்லில் எப்படி அனுமர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்? மலை மீது ஏறினால் கலவரம் வரும் என்று சொன்ன சு.வெங்கடேசன் இப்போது அமைதியாக இருப்பது ஏன்? தர்காவில் சந்தனக்கூடு நடக்கும்போது மலையைத் திறந்து விடுபவர்கள், கார்த்திகை தீபத்தின்போது ஏன் அனுமதி மறுத்தார்கள்? உங்கள் தர்காவிற்கு வந்து நான் வழிபடத் தயார்; எங்கள் தீபத்தூணுக்கு வந்து நீங்களும் விளக்கேற்றுங்கள். அந்தச் சகோதர மனப்பான்மை உங்களுக்கு இருக்கிறதா?" என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், தீபம் ஏற்ற அனுமதி கோரி உயிரிழந்த நபரின் மரணத்தை அரசு கொச்சையாகப் பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விசிக தலைவர் திருமாவளவனைச் சாடிய கஸ்தூரி, "திருமாவளவன் மீது நான் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் இப்போது அவர் திமுக-வின் கைப்பாவையாக மாறிவிட்டார். ஆபாசச் சிற்பங்கள் இருப்பதுதான் இந்துக் கோவில்கள் என்று சொன்னவர் அவர். வேங்கை வயல் முதல் தூய்மைப் பணியாளர் பிரச்சனை வரை வாயைத் திறக்காதவர், இப்போது இந்து நம்பிக்கைகளை மட்டும் ஏன் இழிவாகப் பேசுகிறார்? அவருக்கு ஒரு தங்கவேல் கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்வார்" எனச் சாடினார்.

இதையும் படிங்க: தி.குன்றம் விவகாரம்: சமூக ஊடகங்களில் விவாதம் வேண்டாம்..!! ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..!!

தொடர்ந்து நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், "பனையூரில் இருக்கும் நண்பர் விஜய், ஈரோட்டிற்குச் செல்கிறார்; ஆனால் திருப்பரங்குன்றம் பிரச்சனை அவருக்குத் தெரியவில்லையா? கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்துச் சொல்லக் கூட அவருக்கு நேரமில்லையா? உங்களைச் சுற்றியுள்ள கூட்டம் முருகப் பக்தர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆமாம் அல்லது இல்லை என்று ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லுங்கள். ஒருவேளை உங்களுக்குப் பேசத் தெரியவில்லையா? அல்லது பேச விருப்பமில்லையா? இரண்டுமே ஒரு வருங்கால முதல்வர் கனவில் இருப்பவருக்கு ஆபத்தானது" என எனக் கேள்வி எழுப்பினார். சனாதனம் என்பது அனைத்து மதங்களையும் மதிப்பதே என்று கூறி, திமுக-வின் இந்து எதிர்ப்புப் போக்கிற்கு மக்கள் உரியப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்துத் தனது பேட்டியை முடித்தார்.
 

இதையும் படிங்க: "திமுக ஏவிவிடும் பூனையாக மாறிவிட்டார் திருமாவளவன்!" - விசிக-வை அடகு வைத்துவிட்டதாக விமர்சித்த நிர்மல்குமார்! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share