காங்கிரசுக்கு நன்றி இருக்கணும்... மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்ல.!! - ஜெகத்ரட்சகன்
காங்கிரசுக்கு நன்றி உணர்வு இருக்க வேண்டும் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தற்போது திமுகவும் காங்கிரஸும் இணைந்து செயல்படும் கூட்டணி சூழலில் சில பதற்றங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து ஆட்சியில் பங்கு கோரி பேசி வருவது திமுகவை சங்கடப்படுத்தி வருகிறது. அவர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கூட்டங்களில் பேசும்போது, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகள் வேண்டும், உள்ளாட்சியில் அதிக இடங்கள் வேண்டும்" என்று வலியுறுத்தி வருகிறார்.
கடந்த தேர்தல்களில் திமுகவின் சில தவறுகளுக்கு காங்கிரஸ் பழி சுமந்ததாகவும், இப்போது மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். இது திமுக தரப்பில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. சில திமுக தலைவர்கள் காங்கிரஸின் வலிமையை கேள்விக்குள்ளாக்கியதற்கு பதிலடியாக இவை வெளிப்படுவதாகத் தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரம் கூட்டணியை சோதிக்கும் வகையில் இருக்கிறது. இந்நிலையில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு நன்றி உணர்வு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்று சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில், குறிப்பாக 2018-2019 லோக்சபா தேர்தல் சூழலில் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!
அப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே ஸ்டாலின் அந்த நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இதனால் இந்தியா முழுவதும் திமுகவின் நிலைப்பாடு கவனிக்கப்பட்டது. இப்போது மாணிக்கம் தாகூரின் தொடர் கோரிக்கைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், அவரது கட்சியினரே அவ்வாறு கருதுவதாகவும் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்லை என காங்கிரஸாரே கூறிவிட்டனர். செய்தியில் வர வேண்டும் என்பதற்காக மாணிக்கம் தாகூர் எதையாவது பேசிக்கொண்டிருப்பார் என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் முற்றும் மோதல்! செல்வப்பெருந்தகையை மிகக் கடுமையாக சாடிய விசிக வன்னி அரசு!