விஜய் ரசிகர்களுக்கு ஒர் நற்செய்தி! ஜனநாயகன் முடிவு என்ன? ஜன., 27ல் ரிசல்ட் தெரியும்!!
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கலையொட்டி ஜன., 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என, படக்குழு அறிவித்தது.
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எப்.சி.) தணிக்கை சான்று வழங்க மறுத்ததால், படத்தின் வெளியீடு முழுமையாக தடைபட்டது. இதனால் படக்குழு மற்றும் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் எல்.எல்.பி. சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, "உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும்" என்று கடந்த ஜனவரி 9-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.எப்.சி. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு வரும் ஜனவரி 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிக்கலில் ஜனநாயகன்... சென்சார் சான்று கிடைக்குமா? ஹைகோர்டில் விசாரணை தொடக்கம்..!
இந்த உத்தரவு வெளியானதும் திரைத்துறை மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதி உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதை பொறுத்தே படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகும். தணிக்கை சான்று கிடைத்தால் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளது. இல்லையெனில், மேலும் சட்டப்பூர்வ போராட்டங்கள் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜனநாயகன்' படம் அரசியல் சார்ந்த கருத்துகளை முன்வைக்கும் திரைப்படமாக இருப்பதால், தணிக்கை வாரியத்தின் மறுப்புக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. இந்த வழக்கின் முடிவு நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்துடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது. ஜனவரி 27 அன்று வரும் தீர்ப்பு தமிழ் திரைத்துறைக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க: மோடிஜி உங்க எண்ணம் பலிக்காது..! ஜனநாயகனுக்கு ராகுல்காந்தி ஆதரவு..!