“ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு ராகுல் ஆதரவு தெரிவித்ததைப் போல, ஜார்க்கண்ட் மாணவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 3 தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சுயாதீன குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆனால், தங்களது கோரிக்கைகளுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிங்க: தேர்வு முறைகேடு புகார்! ஜார்க்கண்டில் போராட்டம் தீவிரம்! சட்டசபை நோக்கி பாய்ந்த மாணவர்கள்!
இதனால் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மீது மாணவர்கள் தற்போது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், அந்த அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என ராகுல் காந்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு ராகுல் ஆதரவு தெரிவித்ததைப் போல, ஜார்க்கண்ட் மாணவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுல் காந்தியின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணை நடத்தி, மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் ஜார்க்கண்ட் அரசுக்கு அரசியல் ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: காங்., அலுவலகத்தில் முழு ‘வந்தே மாதரம்’ பாடல்! பொறுமை இழந்த சோனியா காந்தி! ராகுல், கார்கே ரியாக்ஷன் வைரல்!