×
 

இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!

தேசிய அளவில் பாஜவுக்கு எதிரான இண்டி கூட்டணியில் தலைவராகவும், அந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் காங்கிரசின் ராகுல் முன்னிறுத்தப்பட்டு வருகிறார்.

சென்னையில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவரது பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் கூறியதாவது: “தமிழ் இனத்தின் குரல் டில்லிக்கு கேட்கத் தொடங்கிவிட்டது. இனி தெற்கு தேயவே தேயாது; தேயவும் விட மாட்டோம். ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைக்கப் போகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். திராவிடம் நாடு தழுவியது. இது திராவிடர்களின் போராட்டம். அதன் நாயகன் ஸ்டாலின். அவருக்கு தோள் கொடுக்க வேண்டியது தமிழனின், இந்தியனின் கடமை. நாளை நமதாக வேண்டும்” என்று உணர்ச்சிமிக்க வகையில் பேசினார்.

இந்த பேச்சு தற்போது திமுக-காங்கிரஸ் இடையே நடக்கும் தொகுதி பங்கீட்டு இழுபறியுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் இண்டி கூட்டணியில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வரும் நிலையில், கமலின் பேச்சு ஸ்டாலினை மாற்று பிரதமர் வேட்பாளராக முன்வைக்கும் முயற்சியாக தெரிகிறது. 

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின், கமல், விஜய் வீட்டுக்கு சிக்கல்! ஈ.சி.ஆரில் விதிமீறல் கட்டிடங்களா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சமீபத்திய மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வியடைந்து வரும் சூழலில், தமிழகத்தில் மட்டும் பாஜகவால் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி திமுக தலைமை தேசிய அரசியலில் தனது செல்வாக்கை உயர்த்த முயல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “திமுகவினரே கமலை வேண்டுமென்றே இப்படி பேச வைத்துள்ளனர். ராஜ்யசபா சீட் பெற்ற விசுவாசத்திற்காக கமல் இப்படி பேசியிருக்கலாம். ஆனால் திமுக மாநில கட்சி, காங்கிரஸ் தேசிய கட்சி என்பதை மறக்கக் கூடாது. லோக்சபாவில் நாங்கள் பிரதான எதிர்க்கட்சி. ராகுல் எதிர்க்கட்சித் தலைவர். இதையெல்லாம் மறந்து ஸ்டாலினை உச்சி குளிர வைப்பது நியாயமில்லை” என்று விமர்சித்தனர்.

தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் 25 சீட்களுக்கு மேல் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. சில காங்கிரஸ் தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்க மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதற்கு செக் வைக்கும் வகையில் ஸ்டாலினை தேசிய தலைவராக முன்னிறுத்தும் பேச்சு வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கமலின் பேச்சு திமுக-காங்கிரஸ் உறவை மேலும் சிக்கலாக்கியுள்ளது. தமிழக அரசியலில் புதிய சூழல் உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share