பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!
பொள்ளாச்சி வழக்கில் துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுக்குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார் அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்தது. இதன்பின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சுமார் 6 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், இன்று கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த 9 குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார். இதில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்... முதல்வர் மு.க ஸ்டாலினுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரத் திமிரில், ஆணவத்தோடு ஒரு நாகரிக சமூகம் நினைத்துப் பார்க்கவும் கூசும் கொடுமையைப் பொள்ளாச்சியில் நடத்திக்காட்டிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியிருக்கும் தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் வணங்கி வரவேற்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2019-ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இளம்பெண்கள் கதறிக்கொண்டு தப்ப முயலும் வீடியோக்கள் வெளியாகி மக்கள் மனசாட்சியை உலுக்கின. இந்த வழக்கில் துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள். போலியான அவதூறுகளுக்கு அஞ்சாமல், பிறழ்சாட்சிகளாக மாறாமல் தாங்கள் பாதிக்கப்பட்டதை விசாரணையில் வெளிப்படுத்திய அவர்களது தீரம் பாராட்டத்தக்கது. பிறரும் இதுபோல் பாதிக்கப்படாமல் இருக்க இந்தத் துணிச்சல் மிகுந்த செயல்பாடு வழிவகுக்கும். இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களை இந்தச் சமூகம் இழிவாகப் பார்க்கலாகாது என்பது உணர்த்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று. வழக்கை சரியான முறையில் நடத்திச் சென்று, தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கை போல அண்ணா பல்கலை. வழக்கிலும் போராடுங்கள்... அண்ணாமலை வலியுறுத்தல்!