“அவரோட வளர்ப்பு அப்படி...” - சி.வி.சண்முகத்திற்கு எதிராக கொதித்தெழுந்த குஷ்பூ, கனிமொழி, ஜோதிமணி... வெட்கக்கேடு என விளாசல்...!
பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் சி.வி. சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பது வீண் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நடிகை நயன்தாரா குறித்து அநாகரிகமாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு அரசியல் தலைவர்கள் மகளிர் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்திருக்கின்றனர். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு கோரி அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை நயன்தாரா குறித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அநாகரிக பேச்சுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அந்த வகையில் அரசியல் நாகரீகமோ அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை என்று திமுக எம்பி கனிமொழி சாடி உள்ளார். பெண்களை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் சி.வி. சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பது வீண் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேபோல் சி.வி. சண்முகம் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி குஷ்பு “இஷ்டத்திற்கு பேச நடிகைகள் உங்கள் சொத்தோ அல்லது உடமைகளோ அல்ல” என்று கூறியுள்ளார். கீழ்த்தரமான மற்றும் அற்பத்தமான பேச்சுக்கு நடிகைகளின் பெயரை பயன்படுத்துவதா என விளாசியுள்ள அவர் சி.வி. சண்முகத்தின் பேச்சு அவமதிப்பு மட்டுமல்ல மனித குலத்துக்கே வெட்ககேடானது என சாடியுள்ளார்.
இதையும் படிங்க: இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!
மேலும் அவர்களின் உண்மையான மனநிலை மோசமான வளர்ப்பு மனித பண்பற்ற தன்மையை காட்டுவதாகவும், உங்கள் குடும்ப பெண்கள் குறித்து இப்படி பேசுவீர்களா? என நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். அதிமுக எம்பி சிவி சண்முகம் இதுபோன்று தொடர்ச்சியாக பேசி வருவதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணயம் தடைவிதிக்கவும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்களை இழிவுபடுத்தி பெண்மையை மதிக்காத அரசியல் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று திமுக எம்பி தமிழிச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டங்களை கடந்து தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சி.வி. சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்பதோடு போலீசார் வழக்கு பதிவு செய்யவும் கோரிக்கை வலுத்து வருகிறது.
ஒரு பெண்ணை தலைமை வகித்த அதிமுக கட்சி இன்று, பெண்களை பொது வெளியிலும், அரசியல் களத்திலும் அசிங்கப்படுத்திக் கொண்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் வந்து சி.வி.சண்முகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாதர் சங்கங்கள், பெண்ணியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?