"போலீஸ் சித்திரவதையால் இளைஞர் பலி"..! தமிழகம் யார் கையில்..? விளாசிய கனிமொழி..!
தூத்துக்குடியில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி கனிமொழி எம்பி விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு காவல் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகாரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது இளைஞர் அருணாச்சலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக நாகர்கோவிலிலும் ஒரு இளைஞர் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்ததாகக் கூறப்படும் செய்தி மாநிலம் முழுவதும் வேதனையை ஏற்படுத்திய நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாகக் கூறப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் ஏற்படாமல் அவர் உயிரிழந்தார்.
உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காவல் நிலையத்தில் சித்திரவதை நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இந்தச் சம்பவங்கள் குறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு பெருமை: இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் தமிழக வீரர் மணிமாறன் தேர்வு!
தூத்துக்குடியில் 26 வயதான இளைஞர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்தும், நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்பட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், “இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்” என்று கேள்வி எழுப்பினார். நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!