×
 

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முக்கிய திருப்பம்! சிபிஐ இறுதி அறிக்கை தயார்! விரைவில் குற்றப்பத்திரிகை?

த.வெ.க., தலைவர் விஜய், த.வெ.க., நிர்வாகிகள், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என, பலரையும் டெல்லி அழைத்து, சி.பி.ஐ., விசாரணை செய்தது.

தமிழக அரசியலில் பெரும் கவனம் பெற்ற கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையை நிறைவு செய்துள்ள சிபிஐ, தனது இறுதி அறிக்கையை இந்த வாரத்திலேயே உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் அமைத்து, விசாரணை முன்னேற்றத்தை கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. விசாரணையின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றமும் மாதந்தோறும் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

தற்போது, அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இறுதி அறிக்கை தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு ஆய்வு செய்து, தேவையான விளக்கங்களை சிபிஐயிடம் கேட்கும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அறிக்கையின் இறுதி வடிவம் உறுதி செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் சம்பவம் தமிழக அரசியலில் பரவலாக விவாதிக்கப்பட்ட விவகாரமாக இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக எடுத்துரைத்தன. தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முடிவு மீது அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.

 

இதையும் படிங்க: "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share