கேரள முதல்வராகிறார் கே.சி.வேணுகோபால்! பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறாரா தவெக விஜய்?!
கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) பெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கான பரிந்துரையை காங்கிரஸ் பார்வையாளர்கள் குழு ஏற்கெனவே தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் சமர்ப்பித்துள்ளது.
கேரள காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. ஆனால், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முதல்வராக பொறுப்பேற்றால், ஆலப்புழா மக்களவைத் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!
கேரள தேர்தலில் யூடிஎஃப் 102 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது.
கேரள அரசியலில் இது முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. கே.சி. வேணுகோபால் முதல்வரானால், கேரள அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் விஜய் கலந்துகொள்வது தமிழக-கேரள அரசியல் உறவுகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!