விஜய்யை கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடவே இல்லையே... கிண்டலடித்த அமைச்சர் கே.என்.நேரு!!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக எப்போதும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுக - பாஜகவுடன் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தவெக கூட்டணி வைத்துக் கொள்ளாது என அறிவித்தார்.
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜக உடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை நமது தமிழக வெற்றிக் கழகம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?
இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் விஜய் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, விஜய் கட்சியை கூட்டணிக்கு வாங்கன்னு நாங்க கூப்பிடவே இல்லையே என கிண்டலாக பதில் அளித்தார்.
முன்னதாக, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பேசுகையில், தவெக தனித்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இல்லை. தவெகவும் பாஜகவும் தான் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம். பலர் தனித்துப் போட்டியிடலாம், அது அவர்களது தேர்வு. அதற்காக திமுக கூட்டணிக்கு வெற்றியில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது திமுக கூட்டணி முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!